அம்பானி இடத்தை காத்திருந்து பிடித்த அதானி... ரூ.60,000 கோடி வித்தியாசம்
Adani reclaims top spot from Ambani: அம்பானியிடமிருந்து முதலிடத்தை மீண்டும் கைப்பற்றினார் அதானி.
இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியின் முதல் இடத்தை கௌதம் அதானி பிடித்துள்ளார்.
முதல் இடம்
கடந்த வாரம் வெளியான ஆசியப் பணக்காரர்கள் பட்டியலில் பைட்டான்ஸ் நிறுவனத்தின் தலைவர் Zhang Yiming கௌதம் அதானி, முகேஷ் அம்பானி ஆகியோரை முந்தி பெரும் பணக்காரராக உயர்ந்தார்.

இந்த நிலையில் தற்போது ஹூரன் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. கடந்த 10 வருடமாக அம்பானி, அதானிக்கு மத்தியில் பெரும் போட்டி இருந்து வரும் வேளையில்,
இந்த வருடம் கௌதம் அதானி 9.23 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஹூரன் இந்தியப் பணக்காரர்கள் பட்டியல் 2026ல் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி 8.63 லட்சம் கோடி ரூபாய் உடனும், அதானியை ஒப்பிடுகையில் சுமார் 60,000 கோடி ரூபாய் வித்தியாசத்துடன் ஹூரன் பட்டியலில் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளார்.
இந்த வருடம் ஹூரன் இந்திய பணக்காரர்கள் 2026 பட்டியலில் 1000 கோடி ரூபாய்க்கும் அதிக சொத்து மதிப்புடையவர்கள் சுமார் 1810 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இவர்களின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 12.8 சதவீதம் அதிகரித்து மொத்தம் 187.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 187.5 லட்சம் கோடி ரூபாய் என்பது இந்தியாவின் ஜிடிபி-யில் சரி பாதியாகும்.
மேலும் சுமார் 1810 பேர் கொண்ட இந்த பட்டியலில் 391 பேர் மட்டுமே பில்லியனர் என்ற நிலையை எட்டியுள்ளனர், 5 ஆண்டுக்கு முன்பு இந்த எண்ணிக்கை 237 ஆக மட்டுமே இருந்த நிலையில் 154 பேர் அதிகரித்துள்ளனர்.
ஆர்செல்லார் மிட்டல்
இந்த ஆண்டு டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் கவனிக்கக் கூடிய விடயமாக ஆர்செல்லார் மிட்டல் நிறுவனத்தின் தலைவரான லட்சுமி மிட்டல் சொத்து மதிப்பு 93 சதவீதம் அதிகரித்து 3.39 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து, இப்பட்டியலில் கடந்த ஆண்டைவிட 8 இடங்கள் முன்னேறி 3வது இடத்திற்கு உயர்ந்துள்ளார்.

ஐரோப்பியச் சந்தையில் வெளிநாட்டு ஸ்டீல் வருகையில் கொண்டு வரப்பட்ட கட்டுப்பாடுகள் ஆர்செல்லார் மிட்டல் நிறுவனத்திற்குச் சாதகமாக அமைந்தது.
இதேபோல் அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா குழுமம் பெரும் தடுமாற்றத்தில் இருந்த நிலையில் சந்தையில் உலோக தேவைக்கு ஏற்ப நிறுவனங்களை டீமெர்ஜ் செய்ததன் மூலம் அனில் அகர்வாலின் சொத்து மதிப்பு 2.08 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்து 9வது இடத்தை பிடித்துள்ளார்.