ஒருபோதும் தலைகுனிய மாட்டோம்... ஐ.நாவில் ஈரானிய ஜனாதிபதி ஆவேசம்
We will never bow our head or bend at the knee: நாங்கள் ஒருபோதும் தலை குனியவோ, மண்டியிடவோ மாட்டோம்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பேசிய ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன், நாங்கள் ஒருபோதும் தலை குனியவோ, மண்டியிடவோ மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.
உலகம் வேடிக்கைப் பார்த்தது
நேற்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆற்றிய உரைக்கு பெஷேஷ்கியன் மிகுந்த கோபத்துடன் பதிலளித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி எங்களை பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், உண்மையான பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள் என்பது வரலாறு தெரிந்தவர்களுக்கு புரியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை மீது குண்டு வீசிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் பிஞ்சு சிறார்கள் பலர் கொல்லப்பட்டதை இந்த உலகம் வேடிக்கைப் பார்த்தது என்றும் பெஷேஷ்கியன் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.
பெஷேஷ்கியன் பேசத்தொடங்கியதும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் பிரதிநிதிகள் அனைவரும் அவையை விட்டு மொத்தமாக வெளியேறினர். ஈரானிய மக்கள் ஒருபோதும் தலைகுனிய மாட்டோம் என்று கூறியுள்ள பெஷேஷ்கியன், அதேவேளையில் அச்சுறுத்தல்கள் ஏதுமின்றி பேச்சுவார்த்தை நடத்தத் தங்கள் நாடு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தடைகள், அதிகரித்த அழுத்தம், அதிகமான மிரட்டல்கள் ஆகியவற்றின் முன்னிலையில் ஈரானிய மக்களின் எதிர்ப்பு மேலும் அதிகரிக்கும் என்பதை ட்ரம்ப் அறிந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
ட்ரம்ப் மற்றும் எங்களை மிரட்ட முயல்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்; அதாவது, வன்முறை மொழியை ஏற்காமல், நாங்கள் உரையாடல், ராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருக்கிறோம் என்றார்.
பின்னர், ஈரான் மீது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களிடம் சில வார்த்தைகள் கூற விரும்புவதாக கூறிய பெஷேஷ்கியன், அவர்கள் ஈரானின் வலிமையையும் உறுதியையும் சோதித்துப் பார்த்துள்ளனர்; ஈரான் ஒருபோதும் சரணடையச் செய்ய முடியாத நாடு என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.
ஈரான் ஒருபோதும் ஆக்கிரமிப்பாளராகச் செயல்பட்டதில்லை, எந்தப் போரையும் தொடங்கியதில்லை; மாறாக, பேச்சுவார்த்தையில் தனது ஈடுபாட்டை அது எப்போதும் வெளிப்படுத்தியுள்ளது. அவர்கள் எங்கள் மீது போரைத் திணிக்கிறார்கள்; ஆனால், தற்காப்பு நோக்கிலான போரிலோ அல்லது சண்டையிடுவதிலோ எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம்.
ஆறாத ஒரு புண்ணாக
எங்கள் உயிரின் இறுதி மூச்சு வரை, எங்கள் தாய்நாடான நேசத்திற்குரிய ஈரானைப் பாதுகாத்து நிற்போம் என்றார். குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே ஒப்பீடுகளைச் செய்து, இரட்டைத் தரங்களைக் குறிப்பிடுவதாக பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார்.
மேலும், அணு ஆயுதம் இஸ்ரேலிடம் உள்ளது, ஆனால் ஆய்வாளர்கள் ஈரானில் முகாமிட்டுள்ளனர். இஸ்ரேல் கொலை செய்கிறது, ஆனால் ஈரான் தடைகளுக்கு உள்ளாகிறது என்றார்.
பாலஸ்தீனத்தில் நிலவும் சூழலானது சர்வதேச சமூகத்தின் மனசாட்சியில் ஆறாத ஒரு புண்ணாகவும், பொதுமக்களின் துயரத்தைத் தடுப்பதில் சர்வதேச நடைமுறைகள் தோல்வியடைந்ததற்கான அடையாளமாகவும் திகழ்கிறது என்றும் பெஷேஷ்கியன் குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீனத்தைப் புறக்கணித்துவிட்டு நம்மால் அமைதியைப் பற்றிப் பேச முடியாது. பாலஸ்தீனத்திற்கு நீதி கிடைக்காமல் மேற்கு ஆசியாவில் நீடித்த அமைதி சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பயங்கரவாதச் செயல்களிலும் குற்றங்களிலும் ஈடுபடுபவர்கள், அவர்களா அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் பாதுகாவலர்கள்? அவர்கள் எந்தவொரு சர்வதேச விதியையும் பின்பற்றுவதில்லை என்று காட்டமாகச் சாடினார்.
கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக ஈரான் எந்தவொரு நாட்டின் மீதோ அல்லது எந்தவொரு பகுதியின் மீதோ தாக்குதல் நடத்தவில்லை என்றும், அது தற்காப்பு சார்ந்த ராணுவ வலிமையிலேயே கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.