விமான நிறுவனம் தொடங்கும் அதானி? விதியை தளர்த்த மத்திய அரசிடம் கோரிக்கை
அதானி குழுமம் விமான நிறுவனம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய உள்நாட்டு விமான சந்தை
இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்தில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து சுமார் 90% பங்கைக் கொண்டுள்ளது.

இந்த நிறுவனங்களின் சேவையில் சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும், இந்தியா முழுவதும் விமானபயணிகள் பாதிப்பை எதிர்கொள்ளும் நிலை உள்ளது.
கடந்த ஆண்டு இண்டிகோ விமானசேவையில் ஏற்பட்ட பாதிப்பால், நாடு முழுவதும் பயணிகள் பாரிய சிக்கலை எதிர்கொண்டனர்.
இதன் காரணமாக, விமான சேவையில் உள்ள இருமுனை ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி, புதிய விமான நிறுவனங்களின் வருகை மூலம் போட்டியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
விமான நிறுவனம் தொடங்கும் அதானி?
இந்நிலையில், இந்தியாவில் பல்வேறு துறைகளில் கோலாச்சி வரும் அதானி குழுமம், விமான நிறுவனம் தொடங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட், அகமதாபாத், லக்னோ, மும்பை, குஜராத், ஜெய்ப்பூர், குவஹாத்தி, மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் நவி மும்பை உள்ளிட்ட 8 விமான நிலையங்களை இயக்கி வருகிறது.
மேலும், மும்பை சர்வதேச விமான நிலைய லிமிடெட்டில் 73% பங்குகளையும், நவி மும்பை சர்வதேச விமான நிலைய லிமிடெட்டில் 74% பங்குகளையும் கொண்டுள்ளது.
இதே போல், ஜிஆர்எம் நிறுவனம் டெல்லி, ஹைதராபாத், கோவாவில் உள்ள மனோகர் சர்வதேச விமான நிலையம், பீதர் மற்றும் நாக்பூர் ஆகிய விமான நிலையங்களை இயக்கி வருவதோடு, போகபுரத்தில் புதிய விமான நிலையத்தை கட்டி வருகிறது.
தற்போதுள்ள விதிமுறைகள், விமான நிலையங்களை இயக்கும் நிறுவனங்கள், விமான நிறுவனத்தில் 10% க்கும் அதிகமான பங்குகளை வைத்திருப்பதைத் தடுக்கின்றன.
இந்நிலையில், இந்த விதியில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசை அதானி குழுமம் அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக, அதானி குழுமம் விமான நிறுவனத்தை தொடங்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், விமான நிலையங்கள் நிர்வகிக்கும் நிறுவனங்கள், விமான சேவையை தொடங்கினால் விமானங்கள் புறப்படும் மற்றும் தரையிறங்கும் நேரங்களை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் என விமான சேவை நிறுவனங்கள் இந்த திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும்.
அவ்வாறு விதிகள் திருத்தப்பட்டால், விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனங்களின் வணிகங்களுக்கு இடையே ஒரு நடுநிலையான உறவைப் பேணுவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |