ஆண்களுக்கும் இலவச பேருந்து; மகளிருக்கு ரூ.2,000 - தேர்தல் வாக்குறுதியை அறிவித்த அதிமுக
ஆண்களுக்கு இலவச பேருந்து, மகளிருக்கு ரூ.2,000 என அதிமுக முதற்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.
அதிமுக தேர்தல் வாக்குறுதிகள்
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வாக்குறுதிகள் என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இன்று முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இதனையடுத்து, அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.
குலவிளக்கு திட்டத்தின் கீழ், அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் மாதம் ரூ.2,000 வழங்கப்படும்.

நகரப்பேருந்துகளில் ஆண்களுக்கும் கட்டணமில்லா பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். நடைமுறையில் உள்ள, நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
'அம்மா இல்லம் திட்டம்' மூலம், கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
நகரப் பகுதிகளில் சொந்த வீடு இவ்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி 'அம்மா இல்லம் திட்டம்' மூலம் விலையில்லாமல் வழங்கப்படும்.
ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கின்றபோது, அரசே இடம் வாங்கி. அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணி நாட்கள் 150 ஆக உயர்த்தப்படும்.
அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ், பெண்களுக்கு ரூ.25,000 மானியத்தில் 5 லட்சம் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.
மேற்கண்ட 5 தேர்தல் வாக்குறுதிகளை முதற்கட்டமாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |