அதிமுக நிர்வாகி அரிவாளால் வெட்டிக்கொலை
தமிழக மாவட்டம் சேலத்தில் அதிமுக பகுதி செயலாளர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக செயலாளராக பதவி வகித்து வந்தவர் சண்முகம் (64).
தாதகாப்பட்டியைச் சேர்ந்த இவர் அப்பகுதியில் கஞ்சா, லொட்டரி விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு தனது கட்சி அலுவலகத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, சண்முகத்தை வழிமறித்த மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளது.
இதில் படுகாயமடைந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அப்பகுதி மக்கள் அங்கு வந்தபோது கொலையாளிகள் இருசக்கர வாகனங்களில் தப்பியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சண்முகத்தின் உடலை மீட்டனர்.
அரசியல் முன்விரோதம் அல்லது கஞ்சா புழக்கம், லொட்டரி விற்பனைக்கு சண்முகம் இடையூறாக இருந்ததால் இந்த கொலை நடந்ததா? என்கிற கோணத்தில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |