தவெகவிற்கான ஆதரவு வாபஸ் - ஒன்றிணைந்த அதிமுக
அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக இணைந்த நிலையில், தவெகவிற்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர்.
ஒன்றிணைந்த அதிமுக
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், அதிமுக 172 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
தொடர் தோல்விகளால், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணி தனியாக செயல்பட்டு வந்தது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவிற்கு ஆதரவாக சி.வி.சண்முகம் அணியை சேர்ந்த 25 அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.
தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்த அந்த எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி தடை தாவல் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யுமாறு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சி.வி.சண்முகம் தவிர எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அவரது அணியை சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்தற்கு மன்னிப்பு கடிதம் வழங்கி ஒன்றிணைந்துள்ளனர்.
தவெக ஆதரவு வாபஸ்
இதனை தொடர்ந்து, தலைமை செயலகத்திற்கு சென்று தவெகவிற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் அளித்துள்ளனர்.
மேலும், தகுதி நீக்க நடவடிக்கை எடுக்குமாறு அளிக்கப்பட்ட மனுவையும் திரும்ப பெற்றுள்ளனர்.
இதன் பின்னர் பேசிய எஸ்.பி.வேலுமணி, "தவெகவுக்கு மக்கள் செல்வாக்கு இருந்த காரணத்தினால் அவர்களுக்கு நாங்கள் சட்டமன்றத்தில் ஆதரவு தெரிவித்தோம். எங்களுக்குள் கருத்து வேறுபாடு தான், ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்றுதான் கூறினோம்.

குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துக்களை பரிசீலிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இருப்பது கருத்து வேறுபாடுதானே தவிர, பிளவு அல்ல. சபாநாயகரிடம் அளித்த தகுதி நீக்க மனுக்களை நாங்கள் வாபஸ் பெற்றுவிட்டோம்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |