மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு: தமிழகம் முழுதும் இருந்து தொண்டர்கள் குவிந்தனர்
மதுரையில் நாளை (ஆகஸ்ட் 20) நடைபெறவிருக்கும் அதிமுக எழுச்சி மாநாட்டில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
மதுரை அருகே வலையங்குளத்தில் நாளை நடைபெறவிருக்கும் மாநில மாநாட்டிற்கான பந்தல், மேடை, தொண்டர்களுக்கு உணவு வழங்குமிடம், வாகனம் நிறுத்துமிடங்கள், கழிப்பறைகள் வசதிகள் போன்ற ஏற்பாடுகள் முடிந்துவிட்டன.
பந்தல்களில் 3 லட்சம் தொண்டர்கள் நாற்காலிகளில் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாநாட்டு நிகழ்ச்சியில் எல்இடி திரைகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பந்தலைச் சுற்றி பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கலை நிகழ்ச்சிகள் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்டடுள்ளது.
பொது செயலாளர் பழனிசாமி காலை 7.45 மணிக்கு கொடி கம்பத்தில் கட்சி கொடியேற்றி, மாநாட்டை தொடங்கி வைக்க உள்ளார். தொண்டர்கள் 3,000 பேர் அணிவகுப்பு மரியாதை அளிக்கின்றனர்.
மாநாட்டு பந்தலை திறந்துவைக்கும் பழனிசாமி அதிமுக அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிடுகிறார்.
இதனைத்தொடர்ந்து கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 5 பேர், மதுரை மாவட்டச் செயலாளர்கள் செல்லூர் கே.ராஜு, வி.வி.ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார் பேசுகின்றனர்.
பின்னர், பொதுச்செயலாளர் பழனிசாமி சிறப்பு உரையாற்றுகிறார். மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று பழனிச்சாமி மதுரைக்கு செல்கிறார். தமிழகம் முழுதும் உள்ள கட்சி நிர்வாகிகள் நேற்றே மதுரையில் குவியத்தொடங்கினார்கள்.
தமிழகம் முழுவதிலுமிருந்து தொண்டர்களை அழைத்து வரும் பொறுப்பு மாவட்ட செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பத்து தென் மாவட்டங்களில் இருந்து மட்டும் 4,00,000 பேர் பங்கேற்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 1,500 வாகனங்களில் தொண்டர்களை அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |