அதிமுக கூட்டணியில் இணைந்த பாமக - தவெக கூட்டணி செல்வாரா ராமதாஸ்?
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவும் சூழல் உள்ளது.
திமுக கூட்டணியில், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர்கின்றன.
அதிமுக - பாஜக கூட்டணி
அதிமுக பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில், தற்போது பாமகவும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பிற்கு பின்னர் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய போது, "2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாமக கூட்டணி அமைந்துள்ளது. எங்களின் கூட்டணி வெற்றிக் கூட்டணி.

திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற லட்சியத்துடன், வலிமையான தமிழகத்தை உருவாக்க எங்களின் கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் வென்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அதைத்தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், "ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. தற்போது பாமகவும் கூட்டணியில் இணைந்துள்ளது. இயற்கையாக அமைந்த கூட்டணி இது, தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்துவிட்டோம், பின்னர் அறிவிப்போம்.
இது எங்களுக்கு மகிழ்ச்சியான தருணம், எங்கள் தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணி அமைந்துள்ளது. மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பெறுவோம். அதிமுக அடுத்து ஆட்சியமைக்கும்" என தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் உடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்ற கேள்விக்கு, இருவரும் எந்த பதிலும் அளிக்காமல் சென்று விட்டனர்.
தவெக கூட்டணி செல்லும் ராமதாஸ்?
ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையேயான மோதல் காரணமாக பாமக 2 பிரிவாக செயல்பட்டு வருகிறது. ராமதாஸ் தரப்பு நாங்கள் தான் உண்மையான பாமக என கூறி வருகிறது.

இந்த சூழலில், அன்புமணியுடன் அதிமுக கூட்டணி ஒப்பந்தத்தை இறுதி செய்தது ராமதாஸ் தரப்பை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ராமதாஸ் அல்லது அன்புமணி ராமதாஸ் இருக்கும் கூட்டணியில் தாம் இருக்க மாட்டோம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ள நிலையில், திமுக கூட்டணிக்கு செல்வதிலும் ராமதாஸ் தரப்பிற்கு சிக்கல் எழுந்துள்ளது.

ராமதாஸ் தரப்பு தவெக கூட்டணியில் இணையுமா அல்லது தனித்து போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்த முறை 15 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாகவும், 20 தொகுதிகளுக்கு அதிகமாக ஒதுக்க அன்புமணி தரப்பில் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்று மதியம் டெல்லி செல்லும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் உள்ளிட்டோருடன் கூட்டணி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |