சசிகலா ஆதரவாளர்களுக்கு அதிமுகவில் சீட்? யார் யாருக்கெல்லாம் தெரியுமா? கசிந்த தகவல்
தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், சசிகலா ஆதரவாளர்கள் 10 பேருக்கு அதிமுக சீட் கொடுக்க தயாராக இருப்பதாகவும், இதற்காக இரு தரப்பிடையே ரகசிய உடன்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா, தமிழக அரசியலில் ஒரு புயலைக் கிளப்புவார் என்று பார்த்தால், தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
அவரின் அந்த அறிக்கையில், ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமைய வேண்டும், தி.மு.க.,வை வர விடக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தினகரன் தன்னுடைய பேச்சை கேட்காத காரணத்தினால், அதிமுகவில் தன் ஆதரவாளர்களை சேர்த்துவிட சசிகலா முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டு, தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 எம்.எல்.ஏ.,க்களில், வெற்றிவேல் காலமாகி விட்டார். செந்தில் பாலாஜி, தங்கதமிழ்செல்வன் ஆகியோர், தி.மு.க.,வுக்கு போய் விட்டனர். சாத்துார் சுப்பிரமணியன், அ.தி.மு.க.,வுக்கு திரும்பி விட்டார். மீதமுள்ள, 15 பேரில், தகுதி இல்லாதவர்களை தவிர்த்து, மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என சசி கேட்டுள்ளார்.
இதில், குறைந்தபட்சம் பத்து பேருக்கு அவர் தருவார் என்று நம்புகிறார். அ.தி.மு.க.,வின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி விட்டது. அடுத்த வேட்பாளர் பட்டியல் வரும் 9-ஆம் திகதி வெளியாகவுள்ளது, அந்த பட்டியலில் சசிகலா ஆதரவாளர்களின் பெயர்கள் இடம்பெறுவது உறுதி என்று கூறப்படுகிறது.