உயிர் பிழைக்க சொந்தப் பிள்ளைகளையே... கட்டாயப்படுத்தப்படும் நாடொன்றின் பெற்றோர்
ஆப்கானிஸ்தானில் கடும் ஏழ்மை, கடன் தொல்லை மற்றும் வேலையின்மை காரணமாக தங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாததை செய்ய பல பெற்றோர்கள் நிர்பந்திக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுவே ஒரே வழி
வேலையின்மை மற்றும் கடன் தொல்லைகளால் சொந்தப் பிள்ளைகளையே விற்றுப் பிழைக்கும் நிலைக்கு பல பெற்றோர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சியா கோ மலைத்தொடர் பகுதிகளில் வசிக்கும் பலர் இப்படியான முடிவுகளையே எடுக்கின்றனர். அப்துல் ரஷீத் அஜிமி என்பவர் தனது ஏழு வயது இரட்டையர்களில் ஒருவரை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை கண்ணீருடன் பதிவு செய்துள்ளார்.
தனது மற்ற குழந்தைகளுக்கு உணவளிக்க இதுவே ஒரே வழி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சாப்பிடுவதற்கு எங்களிடம் ரொட்டியும் சுடுநீரும் மட்டுமே உள்ளன, தேநீர் கூட இல்லை என்கிறார் அந்தப் பிள்ளைகளின் தாயார் கய்ஹான்.
கய்ஹானின் பதின்ம வயது மகன்களில் இருவர் நகர மையத்தில் காலணிகளுக்கு மெருகூட்டும் வேலையைச் செய்கிறார்கள். மற்றொருவன் குப்பைகளைச் சேகரிக்கிறான்; அவற்றை கய்ஹான் சமையலுக்கு எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்.
சயீத் அஹ்மத் என்பவர் தமது ஐந்து வயது மகளின் சிகிச்சைக்காக அவரை 3200 டொலருக்கு விற்கும் நிலைக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார்.

தமது மகளுக்குக் குடல்வால் அழற்சியும், கல்லீரலில் நீர்க்கட்டியும் ஏற்பட்டது என்றும், உறவினர் ஒருவருக்கு விற்று, அந்தப் பணத்தில் சிகிச்சை முடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடும் வறட்சி
தாம் அப்போது முழுத் தொகையையும் வாங்கியிருந்தால், தமது மகளை அந்த உறவினர் உடனையே அழைத்துச் சென்றிருப்பார் என்றும், தற்போதைக்கு அவளுடைய சிகிச்சைக்குப் போதுமான தொகையை மட்டும் கொடு; மீதமுள்ளதை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் தரலாம் என்றும் அதன் பிறகு அவளை அழைத்துச் செல்லலாம் என்றும் அந்த உறவினரிடம் கூறியதாக சயீத் தெரிவித்துள்ளார்.
இன்னும் ஐந்து வருடங்களில் சயீத் தமது மகளை அந்த உறவினரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆப்கானிஸ்தானுக்கு பெரும் உதவிகள் செய்து வந்த அமெரிக்கா, கடந்த ஆண்டு முதல் அந்நாட்டிற்கான கிட்டத்தட்ட அனைத்து உதவிகளையும் நிறுத்தியது.

தற்போது பிரித்தானியா உட்பட, வேறு பல உதவி செய்யும் நாடுகளும் தங்கள் பங்களிப்புகளைக் கணிசமாகக் குறைத்துள்ளனர். நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாகாணங்களைப் பாதித்துள்ள கடும் வறட்சி, பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது.
2021-ஆம் ஆண்டில் அதிகாரத்தைக் கைப்பற்றிய தாலிபான் அரசாங்கம், வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட ஆப்கானிஸ்தானின் முந்தைய நிர்வாகத்தின் மீதும் பழியைச் சுமத்துகிறது.
அப்துல் ரஷீத் மற்றும் சயீத் போன்ற பல பெற்றோர்கள், பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள சொந்தப் பிள்ளைகளையே விற்கும் அவல நிலைக்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |