ஆப்கானிஸ்தான் கைப்பற்றப்பட்ட நாளில் காபூல் வானில் போராடிய இந்திய விமானம்!
இந்தியாவிலிருந்து 40 பயணிகளோடு ஆப்கன் தலைநகர் காபூல் சென்ற ஏர் இந்தியா விமானம் தரையிறங்குவதற்கு மூன்று மணி நேரமாக போராடிய சம்பவம் வெளிவந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இந்தியத் தலைநகர் டெல்லியில் இருந்து 40 பயணிகளோடு ஏர் இந்தியா விமானம் ஒன்று ஆப்கன் தலைநகர் காபூலுக்கு சென்றுகொன்றிருந்தது.
காபூலில் அன்று 35 டிகிரி செல்ஷியஸ் வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. 20 ஆண்டுகால அமெரிக்க ஆதரவு பெற்ற அரசாங்கம் சரிந்து விழ, தாலிபன்கள் காபூலை கைப்பற்றிக்கொண்டிருந்தா நேரம் அது.
ஆனால், தரையில் எவ்வளவு வேகமாக அரசியல் நிலைமை மாறிக்கொண்டிருக்கிறது என்பது அந்த விமானத்தின் 6 ஊழியர்களுக்கு தெரியாது.
விமானத்தின் பைலட்டுகள் விமானத்தை தரையிறக்கத் தயாரான நேரத்தில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானத்தை வானத்திலேயே பறந்துகொண்டிருக்கும்படி அறிவுறுத்தினர்.
காரணம் எதையும் அவர்கள் கூறவில்லை. அடுத்த ஒன்றரை மணி நேரத்துக்கு அந்த விமானம் தலைநகர் காபூலை 16 ஆயிரம் அடி உயரத்தில் சுற்றிக்கொண்டே இருந்தது என்கின்றன ஏர் இந்தியா வட்டாரங்கள்.
சில நேரங்களில் காபூலுக்கு மேலே விமானத் தகவல் தொடர்பு சரிவர இருக்காது என்பதால், தரையிறங்குவதில் தாமதம் ஏற்படலாம் என்று கருதி அந்த விமானம் கூடுதல் எரிபொருளுடன்தான் சென்றிருந்தது.
பல நேரங்களில் காபூல் விமான நிலையத்துக்கு மேலே விமானங்கள் அதிகமாக பறக்கும், எனவே அது சோர்வூட்டுவதாகவும் இருக்கும் என்கிறார்கள் விமானிகள்.
ஆண்டின் இந்தக் காலப்பகுதியில் நகரைச் சுற்றிப் பறப்பதில் வேறொரு சவாலும் இருக்கிறது. இந்தக் காலப் பகுதியில் காற்று வேகமாகவும், வலிமையாகவும் இருக்கும்.
ஏர் இந்தியா விமானம் மட்டும் இல்லாமல் குறைந்தது வேறு இரண்டு வெளி நாட்டு விமானங்களும் தரையிறங்குவதற்கான அனுமதியை எதிர்நோக்கி வானில் பறந்துகொண்டிருந்தன.
160 இருக்கைகள் கொண்ட அந்த விமானத்தை கேப்டன் ஆதித்ய சோப்ரா என்ற விமானி இயக்கிக்கொண்டிருந்தார். விமானம் கடைசியாக உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.30க்கு தரையிறங்கியது.
டெல்லியில் இருந்து காபூல் வரை விமானத்தில் செல்வதற்கு வழக்கமாக 105 நிமிடம் முதல் 120 நிமிடம் வரை ஆகும். ஆனால், ஞாயிற்றுக்கிழமை சிக்கலான நேரத்தில் காபூல் சென்ற இந்த விமானம் தரையிறங்கும் வரை மூன்றரை மணி நேரம் ஆனது.
தரையில் இருந்த பதற்ற நிலையை அறிய முடிந்ததாகவும், ஆனால், அது எப்படிப்பட்ட பதற்றம் என்று தெளிவாகத் தெரியவில்லை என்றும் விமானத்தில் இருந்த சில பயணிகள் கூறினர்.
ஓடுபாதையில் சிப்பாய்கள் சுற்றிக்கொண்டிருந்தனர். பல விமானங்கள் விண்ணில் சீறிக்கொண்டிருந்தன. சி17 குளோப் மாஸ்டர் ராணுவ போக்குவரத்து விமானமும், சினூக் ஹெலிகாப்டரும் பறந்து வந்து தரையிறங்குவதும், கிளம்பிச் செல்வதுமாக இருந்தன.
பாகிஸ்தான் மற்றும் கத்தாருக்கு சொந்தமான பயணிகள் விமானங்கள் விமான நிலையத்தில் பார்க் செய்யப்பட்டிருப்பதையும் அவர்கள் கவனித்தனர்.
"விமான நிலைய ஊழியர்கள் விமான நிலையத்திலேயே தங்கியிருப்பதாக கேள்விப்பட்டோம். விமான நிலையத்தில் நுழைவதற்கு ஏராளமான மக்கள் முயன்றுகொண்டிருந்தனர்," என்று ஏர் இந்தியா விமானத்தில் இருந்த பயணி ஒருவர் குறிப்பிட்டார்.
விமானம் தரையிறங்கியவுடன் விமான ஊழியர்கள் காக்பிட் எனப்படும் விமானி அறையிலேயே இருந்தனர். காபூலில் இதுதான் எப்போதும் நடைமுறை.
ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் விமான நிலையத்தில் காத்திருந்த பிறகு 129 பயணிகளுடன் அந்த ஏர் இந்தியா விமானம் மீண்டும் புறப்பட்டது.
அதில், பல ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் இருந்தனர். குறைந்தபட்சம் இரண்டு எம்.பி.க்கள் இருந்தனர். முன்னாள் அதிபருக்கான முதுநிலை உதவியாளர் ஒருவர் இருந்தார். காபூலில் நிலவிய போக்குவரத்து நெரிசலில் சிக்கி இன்னும் பலர் அந்த விமானத்தை தவறவிட்டிருக்கக்கூடும்.
"தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஆலாய்ப் பறக்கும் குடிமக்களின் துயரத்தை முன்னெப்போதும் பார்த்ததில்லை நான். விமானத்துக்குள் நடந்து நுழைந்த அவர்களின் கண்களில் எப்படியாவது வெளியேறிவிடவேண்டும் என்ற அவஸ்தை தெரிந்தது," என்று ஒரு பயணி குறிப்பிட்டார்.
அந்த விமானத்தில் இருந்த பயணிகளில் பெரும்பாலானவர்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு தப்பிச் செல்லும் ஆப்கானியர்கள். நாடு திரும்பும் இந்திய தொழிலாளர்கள் பலரும் இருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை நாட்டை விட்டு வெளியேறும் விமானத்தைப் பிடிப்பதற்காக ஆப்கானியர்கள் முண்டியடித்துக் கொண்டு விமான நிலையத்தில் நுழைந்தனர்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பலரும் விமான நிலையத்தில் மொய்த்துக்கொண்டிருப்பதைக் காட்டும் வீடியோக்கள் வெளியாயின. பல முக்கிய விமான நிறுவனங்கள் ஆப்கானிஸ்தான் மீது பறப்பதை தவிர்ப்பதற்காக வேறு பாதைகளில் தங்கள் விமானங்களை திருப்பிவிட்டன.
நாட்டில் இருந்து மக்களை மீட்பதற்கான ஏர் இந்தியா விமானத்துக்காக முண்டியடித்துக்கொண்டு ஓடும் பயணிகளைக் காட்டும் காணொளிகள் வெளியாயின.