பிழைப்பு தேடி ஈரானுக்கு நடந்தே செல்லும் நாடொன்றின் மக்கள்... உடல் உறைந்து பலர் மரணம்
ஆஃப்கானிஸ்தானில் இருந்து பிழைப்புக்காக ஈரானுக்கு நடந்து செல்லும் மக்கள், கடும் குளிரில் சிக்கி உடல் உறைந்து மரணமடைவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குடும்ப சூழலால்
மேற்கு ஆப்கானிஸ்தானை சேர்ந்த 15 வயதேயான ஹபிபுல்லா சமீபத்தில் மலைப்பாங்கான எல்லையைக் கடந்து செல்லும் போது குளிரில் உறைந்து மரணமடைந்துள்ளார்.

குடும்ப சூழலால் அவர் ஈரானுக்கு செல்ல கட்டாயப்படுத்தப்பட்டதாகவே அவரது தாயார் தெரிவித்துள்ளார். எங்களிடம் சாப்பிட உணவு இல்லை, உடுத்த உடை இல்லை. நாங்கள் வசிக்கும் வீட்டில் மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை. குளிர் காய நெருப்பூட்ட எதுவும் இல்லை என மகனின் புகைப்படத்தை அணைத்துக் கொண்டு அவர் அழுதுள்ளார்.
கடந்த மாதம் ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்திலிருந்து சட்டவிரோதமாக ஈரானுக்குள் நுழைய முயன்றபோது மரணமடைந்த குறைந்தது 18 புலம்பெயர்ந்தோரில் ஹபிபுல்லாவும் ஒருவர்.
வெளியான தரவுகளின் அடிப்படையில், கடந்த மாதம் வெப்பநிலை சுமார் -3 டிகிரி செல்சியஸாக இருந்தது. ஆப்கானிஸ்தானில் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்துடன் நிலநடுக்கங்களும் வறட்சியும் சேர்ந்து நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளன.
இதனிடையே, ஈரானில் இருந்து அனுப்பப்பட்ட 15 உடல்களில் ஹபிபுல்லாவும் ஒருவர் என்று ஆப்கானிஸ்தான் எல்லை வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஈர்க்கப்படுகிறார்கள்
மரணமடைந்த மேலும் மூன்று புலம்பெயர்ந்தோரின் உடல்கள் எல்லையின் ஆப்கானிஸ்தான் பக்கத்தில் இருந்து மீட்கப்பட்டதாக ஒரு இராணுவ அதிகாரி தெரிவித்தார்.
மேலும், கடந்த மாதத்தில் மட்டும் கடும் குளிரில் சிக்கி உயிரிழக்கும் அபாயத்தில் இருந்த சுமார் 1,600 ஆப்கானிய புலம்பெயர்ந்தோரை மலைப்பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டதாக ஈரானிய எல்லைக் காவல்படைத் தளபதி மஜித் ஷோஜா தெரிவித்துள்ளார்.

அதிக வேலை வாய்ப்புகள் மற்றும் பொதுவான மொழி காரணமாக அவர்கள் ஈரானை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள் என மஜித் ஷோஜா குறிப்பிட்டுள்ளார்.
ஈரானும் பாகிஸ்தானும் இணைந்து செப்டம்பர் 2023 முதல் ஐந்து மில்லியன் ஆப்கானியர்களைத் திருப்பி அனுப்பியுள்ளன, இது அந்நாட்டின் மக்கள் தொகையை 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையிலேயே, பொருளாதார நிலை, வேலைவாய்ப்புப் பாதுகாப்பின்மை, உணவுப் பாதுகாப்பின்மை, சேவைகளை அணுகுவதில் உள்ள தடைகள் ஆகியவை அவர்களை ஈரான் நோக்கி வெளியேறும்படி கட்டாயப்படுத்துவதாக புலம்பெயர்ந்தோர் அமைப்பு ஒன்று விளக்கமளித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |