மக்கள் உயிர் தான் முக்கியம்! இந்தியாவில் கெத்தாக கொரோனாவை குறைத்த மாநிலம்: எப்படி தெரியுமா?
இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், மும்பையில் கொரோனா பரவல் குறைவாக பதிவாகியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.
இதன் காரணமாக தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் தீவிரமாகி அங்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வடமாநிலங்களில் கொரோனா பல உயிர்களை எடுத்து வருகிறது.
இதனால் ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக மும்பை இருந்து வருகிறது.
ஆம், கொரோனா இந்தியாவில் பரவிய போது, மிகவும் பாதிக்கப்பட்ட நகரமாக மகாராஷ்ட்டிரா இருந்தது. இங்கு கொரோனாவால் பாதிப்போரின் தினசரி எண்ணிக்கை 67 ஆயிரம் வரை சென்றது.
இதையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே முதலில் வார இறுதி நாட்களில் ஊரடங்கை அறிவித்தார். அதன் பின்னரும் நிலைமையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதையடுத்து ஊரடங்குக்கு இணையாக 144 தடை உத்தரவை அவர் மாநிலத்தில் பிறப்பித்தார். இதன் காரணமாக அதிக அளவிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மும்பையை விட்டு வெளியேறத் தொடங்கினர். 144 தடை உத்தரவுக்கு பிறகு அங்கு கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளது.
மும்பையில் இன்று 5,888 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார துறை அறிவித்துள்ளது. இது ஏப்ரல் 14-ஆம் திகதியுடன் (11,163 கேஸ்கள்) ஒப்பிடும் போது 50 சதவீதம் குறைவாகவும். அதேபோல கடந்த மூன்று வாரங்களில் பதிவு செய்யப்பட்ட கொரோனா பாதிப்பில் இது தான் மிகக் குறைவு, நேற்றைய கொரோனா பாதிப்புடன் ஒப்பிடும்போது இது 20 சதவீதம் குறைவாகும்.
மற்ற மாநிலங்கள் இப்போது கொரோனாவால் ருத்ரதாண்டவம் ஆடி வர, மும்பையில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது, ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது.
மேலும், கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 18 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் ஆக குறைந்துள்ளது. கொரோனா உயிரிழப்புகளும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இது மும்பைவாசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் நகரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜிம்கள், மால்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் போன்ற அத்தியாவசிய கடைகள் இயங்க நேரக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.
முதலில் இந்த 144 தடை பற்றிய அறிவிப்பை வெளியிடும்போது, எதிர்க்கட்சியான பாஜக மட்டுமின்றி தொழில்துறையினர், அவ்வளவு ஏன் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரசும்கூட கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.
அப்போது, முதல்வர் உத்தவ் தாக்கரே, மக்களின் வாழ்வாதாரம் முக்கியமானதுதான். ஆனால் அதைவிட அவர்களின் வாழ்க்கை முக்கியமானது என்று கூறி விளக்கம் அளித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.