டிரம்பை தொடர்ந்து.,சீனாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் ரஷ்ய ஜனாதிபதி புடின்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சீனாவிற்கு அரசு முறை பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிரம்பின் சீன பயணம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 3 நாள் அரசு முறை பயணமாக சீனாவிற்கு சென்றிருந்தார். அங்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்-கை நேரில் சந்தித்து முக்கிய விவாதங்கள் மற்றும் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார்.
அத்துடன் இந்த சந்திப்பின் போது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு செப்டம்பர் 24ம் திகதி வருகை தருமாறு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்து இருந்தார்.

ரஷ்ய ஜனாதிபதி புடினின் சீன பயணம்
இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அரசுமுறை சுற்றுப்பயணமாக சீனாவுக்கு செல்ல இருப்பதாக மாஸ்கோ மாளிகை சனிக்கிழமை அறிவித்துள்ளது.
எதிர்வரும் மே 19- மே 20 திகதிகளில் ஜனாதிபதி புடினின் சீன சுற்றுப்பயணம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சுற்றுப்பயணமானது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன - ரஷ்ய நட்புறவு ஒப்பந்தத்தின் 25வது ஆண்டு நிறைவை ஒட்டி இந்த இரு நாட்டு தலைவர்களின் இந்த சந்திப்பு நடைபெறுவது முக்கியத்துவம் பெறுகிறது.
புடின் - ஜி ஜின்பிங்கின் இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள், பொருளாதார வளர்ச்சி, உலகளாவிய பாதுகாப்பு குறித்து முக்கிய விவாதங்களும் ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |