மெக்சிகோவை விட அதிக கார்பன் உமிழ்வை உண்டாக்கப்போகும் அமெரிக்க AI தரவு மையங்கள்
AI Data Centers Raise US Emissions: விரைவில் மெக்சிகோ நாட்டை விட அதிக கார்பன் உமிழ்வை அமெரிக்க AI தரவு மையங்கள் உண்டாக்கப்போவதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் AI தரவு மையங்கள், உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பெரிய சவாலாக மாறியுள்ளன.
சியாரா கிளப் வெளியிட்ட ஆய்வின்படி, 2030க்குள் அமெரிக்காவின் மின்சார உற்பத்தி துறையில் 2.1 பில்லியன் மெட்ரிக் டன் கார்பன் டையாக்சைடு உமிழப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இது 2025 நிலையை விட 618 மில்லியன் டன் அதிகம், சுமார் 42 சதவீதம் உயர்வு ஆகும்.

AI பயன்பாட்டை இயக்குவதற்காக, பல இயற்கை எரிவாயு அடிப்படையிலான மின் நிலையங்கள் கட்டப்படுகின்றன. இதனால் கடந்த 15 ஆண்டுகளாக குறைக்கப்பட்ட கார்பன் உமிழ்வுகள் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
சியாரா கிளப்பின் ஆலோசகர் ஜெரமி ஃபிஷர், “இந்த எண்கள் எங்களை அதிர்ச்சியடையச் செய்கின்றன. ஒரு வருடம் முன்பு இதை பாதியாகவே கணித்திருந்தோம்” என்று தெரிவித்தார்.
AI வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு உதவினாலும், சுற்றுச்சூழல் பாதிப்புகள் மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது. Amazon Web Services மற்றும் Microsoft போன்ற நிறுவனங்கள், விரைவாக தரவு மையங்களை விரிவாக்கி வருகின்றன.
சுற்றுச்சூழல் நிபுணர்கள், “AI வளர்ச்சியைத் தடுக்க முடியாது. ஆனால், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படாவிட்டால், உலகளாவிய காலநிலை இலக்குகள் பாதிக்கப்படும்” என எச்சரிக்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |