சசிகலா மீது டிஜிபி-யிடம் அதிமுக புகார்! ஏதற்காக?
சசிகலா மீது டிஜிபி அலுவலகத்தில் அதிமுக சார்பில் அமைச்சர்கள் புகார் அளித்துள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சசிகலா கொரோனா தொற்று காரணமாக விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
கொரோனா பாதிப்பு குணமானதை தொடர்ந்து சுகாதாரத்துறை அறிவுரைப்படி அவர் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
தற்போது, பெங்களூரு புறநகர் பகுதியான தேவனஹள்ளி அருகிலுள்ள தனியார் சொகுசு விடுதியில் சசிகலா தங்கி இருக்கிறார்.
மருத்துவமனையிலிருந்து புறப்பட்ட சசிகலா, அதிமுக கொடியுடன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய அதே காரில் பயணித்தார்.
சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சசிகலா 7 ஆம் தேதி தமிழகம் வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் 7 ஆம் தேதிக்கு பதிலாக 8.2.2021 திங்கள்கிழமை அன்று காலை 9 மணி அளவில் கர்நாடகாவில் இருந்து புறப்பட்டு தமிழகம் வருகிறார் என ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தியதற்காக நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் புகார் அளித்துள்ளனர்.
அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தவிர மற்றவர்கள் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த அவருக்கு உரிமை இல்லை. அவர் அதிமுக உறுப்பினராக இருந்தாலும், 5 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்பது அதிமுக சட்ட விதி என கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.