திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஏர் பிரான்ஸ் விமானம்: திகிலை ஏற்படுத்திய ஒரு சம்பவம்
பிரான்ஸ் நோக்கி வந்த ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று பாரீஸ் விமான நிலையத்தில் தரையிறக்க முற்படும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று காலை நியூயார்க்கிலிருந்து பிரான்ஸ்நோக்கி வந்துகொண்டிருந்த ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று பாரீஸ் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. அப்போது, திடீரென விமானம் விமானிகளின் கட்டுப்பாட்டுக்கு கட்டுப்பட மறுத்துள்ளது.
தரைக்கட்டுப்பாட்டு அறையிலிருந்த அலுவலர்கள், அந்த விமானம் இடது புறமாக விலகிச் செல்வதைக் கவனிக்க, 1,200 அடிக்கு இறங்கிய விமானத்தை மீண்டும் எழுப்பி, ஒரு சுற்று சுற்றிவிட்டு, மீண்டும் விமான ஓடுபாதையில் விமானத்தை இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் விமானிகள்.
4,000 அடி உயரத்துக்குச் சென்ற பிறகு, அந்த விமானம் மீண்டும் பத்திரமாக ஓடுபாதையில் இறங்கியது..
தொழில்நுட்பக் கோளாறு ஒன்றின் காரணமாக இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாக ஏர் பிரான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதோடு, பயணிகளுக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழலுக்காக வருத்தமும் தெரிவித்துக்கொண்டது.
விமானிகள் சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியதாக விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விமானம் தங்களுக்குக் கட்டுப்படாததால், விமானிகள் அறையில் விமானிகளுக்குள் நடந்த திகிலூட்டும் உரையாடலை வெளியாகியுள்ள வீடியோவில் கேட்கலாம்!