ஜேர்மனியிலிருந்து டெல்லி வந்த விமானத்திற்கு கடத்தல் எச்சரிக்கை; ஜெய்ப்பூரில் அவசர தரையிறக்கம்
ஜேர்மனியிலிருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்தில் கடத்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், விமானம் அவசரமாக ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்டது.
ஏர் இந்தியா விமானத்திற்கு கடத்தல் எச்சரிக்கை
ஜேர்மனியின் பிராங்பர்ட்டிலிருந்து, ஏர் இந்தியா விமானம் (AI2030,) 306 பயணிகளுடன் டெல்லிக்குச் சென்று கொண்டிருந்தது.

விமானம் இந்திய வான்வெளியில் பறந்த போது, விமானி 'ஸ்க்வாக் 7500' குறியீட்டை அனுப்பியதும், விமானம் திருப்பி விடப்பட்டு, ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
'ஸ்க்வாக் 7500' என்ற குறியீடானது, விமானக் கடத்தல் அல்லது சட்டவிரோதத் தலையீட்டைக் குறிக்க சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் குறியீடு ஆகும்.
தரையிறக்கப்பட்ட விமானம் பாதுகாப்பு சோதனைகளாக ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மேற்பார்வையின் கீழ் விமானிகளும் பயணிகளும் படிப்படியாக விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர். பயணிகளும் அவர்களது உடமைகளும் பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, பயங்கரவாதத் தடுப்புப் படை (ATS) மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளைச் சேர்ந்த குழுக்கள் ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு வந்துள்ளன.
மேலும், டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்புப் படை (NSG) குழுவும் உஷார்படுத்தப்பட்டு, தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
விமானி எந்த காரணத்திற்காக 'ஸ்க்வாக் 7500' குறியீட்டை அனுப்பினார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏர் இந்தியா தற்போது வரை இதுகுறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.