பெளத்த மடாலயத்தின் மீது வான்வழித் தாக்குதல்: டஜன் கணக்கானோர் பலி!
மியான்மரின் சாகைங் பகுதியில் உள்ள பெளத்த மடாலயத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் டஜன் கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
பௌத்த மடாலயத்தின் மீது தாக்குதல்
மியான்மரின் மத்திய சாகைங் (Sagaing) பகுதியில் உள்ள ஒரு பௌத்த மடாலயத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட குறைந்தது 23 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
ஜூலை 11, 2025 அன்று அதிகாலை, சாகைங் நகரத்தின் லிண்டா லு (Lin Ta Lu) கிராமத்தில் நடந்த இந்தத் தாக்குதலில் சுமார் 30 பேர் காயமடைந்தனர், அவர்களில் 10 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயரை வெளியிட விரும்பாத உள்ளூர் எதிர்ப்பு குழு உறுப்பினர் ஒருவர் அளித்த தகவலின்படி, அதிகாலை 1 மணியளவில் ஒரு ஜெட் விமானம் மடாலய வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது குண்டு வீசியுள்ளது.
அப்பகுதியில் அண்மையில் நடந்து வரும் சண்டையிலிருந்து தப்பிக்க அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
மியான்மரின் சுதந்திரமான "டெமாக்ரடிக் வாய்ஸ் ஆஃப் பர்மா" (Democratic Voice of Burma) ஆன்லைன் ஊடகம், இறந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது, இருப்பினும் இந்த எண்ணிக்கை உடனடியாக உறுதிப்படுத்தப்படவில்லை.
தாக்குதலுக்கு உள்ளான மடாலயம், மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயில் (Mandalay) இருந்து வடமேற்கே சுமார் 35 கிலோமீட்டர் (20 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |