உறுதியானது 3வது அணி! எந்தெந்த கட்சிகள்.. யார் முதல்வர் வேட்பாளர்? சமக தலைவர் சரத்குமார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே கூட்டணி உறுதியானது என சமக கட்சி தலைவர் சரத்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 6ம் திகதி அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
அதிமுக, திமுக தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த தீவிர பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக, திமுக-வை தவிர 3வது அணி அமையுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் மநீம தலைமையில் 3வது அணி உறுதியாகியுள்ளது.
இன்று தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியில் நடந்த சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் சரத்குமார் மநீம-சமக-ஐ.ஜே.கே கூட்டணியை உறுதிப்படுத்தினார்.
மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே. கூட்டணி உறுதியானது. எங்கள் கூட்டணியில் கமல்ஹாசன் தான் முதல்வர் வேட்பாளர் என சரத்குமார் அறிவித்தார்.
பொதுக்கூட்டத்தில் சென்னை வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என சமக கொள்கை பரப்புச் செயலாளர் விவேகானந்தன் அறிவித்தார்.
நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.
அதேசமயம் நேற்று சென்னையில் பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அமமுக தலைமையில் திமுக-விற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் கூட்டணி பேச வரலாம் என அறிவித்தார்.
இதன் காரணமாக மநீம-சமக-ஐஜேகே கூட்டணியில் அமமுக இணைய வாய்ப்புகள் குறைவு என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.