உலகத் தமிழருக்கு உதவ லண்டனில் உதயமான புதிய அமைப்பு
5.5.23 அன்று அகம் அனைத்துலக நிறுவன தொடக்க விழா, தென்கிழக்கு லண்டன் புறொம்பிளியில் [South east London, Bromley, ஆரம்பமானது.
மங்கள விளக்கினை 1970ல் தமிழ்மாணவர் பேரவை ஆரம்பித்தவர்களில் முக்கியமான ஒருவரான திரு பொன்னுத்துரை சத்தியசீலன் அவர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சிவாஜிலிங்கம் அவர்களும் மற்றும் அகம் அனைத்துலக நிறுவன சுவிஸ் செயற்பாட்டாளர், நெதர்லாந்து செயற்பாட்டாளர்கள் சுவீடன் செயற்பாட்டாளர் , பிரித்தானிய செயற்பாட்டாளர்களும் ஏற்றி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து பிரித்தானியக் கொடி, தமிழீழ தேசியக்கொடி மற்றும் அகம் அனைத்துலக நிறுவனக் கொடி ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
அகம் அனைத்துலக நிறுவன பொறுப்பாளர் திரு பாபு கொள்கையுரை ஆற்றினார்.
அதில் “அனைவரும் ஒன்றிணைந்து எமது அரசியல் தீர்வுக்கான சாணக்கிய பொறி முறைகளை வலுப்படுத்தி எமது இலட்சியத்தை வென்றெடுக்க ஒன்றுபடல் வேண்டும் எனவும், “நான் பெரிது நீ பெரிது என்றில்லாமல்” நாங்கள் எல்லோரும் இணைந்து எமது இலட்சியத்தை வென்றெடுப்போம் என்றும், அகத்தின் மிக முக்கியமான விடயமாக இளையோரை உள்வாங்குதல் அமையும் என்றும், அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் , பயிற்சிகளையும் வழங்கி அவர்களின் நுட்ப அறிவையும் கொண்டு அவர்களை வருங்கால தலைவர்கள் ஆக்குவதற்கான அனைத்து வழிகளையும் மேற்கொள்ளும் என்றும் குறிப்பிட்டார்.
சிறப்புரை பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் பொதுச்செயலாளர் திரு ச வி கிருபாகரன் அவர்களால் வழங்கப்பட்டது.
அவர் அகம் நிறுவனத்தின் அவசியத்தை உணர்ந்துகொண்டு உரையாற்றினார்.
அதில் அகத்தின் தற்போதய தேவைகள் மற்றும் எதிர்கால செயல்த்திட்டங்கள் சம்பந்தமாகவும் அத்துடன் தற்கால அரசியல் சூழல் சம்பந்தமாகவும் உரையாற்றி இருந்தார்.
அரங்க நிகழ்வாக தாயகப்பாடல்கள், நடனம், கவிதை மற்றும் தமிழர் பாரம்பரியக் கலையான சிலம்பம் ஆகியன இடம்பெற்றன.
இறுதியாக கொடியேந்தல் நிகழ்வுடன் அகம் சர்வதேச நிறுவனத்தின் தொடக்க விழா நிறைவேறியது.