கிரிக்கெட் வீரர் சோயப் அக்தருக்கு இப்படி ஒரு பிரச்சனையா? - ரசிகர்கள் அதிர்ச்சி
ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட சம்பவம் ஒன்றை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 21 ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத், பிரெட் லீ, இலங்கையின் சமிந்தா வாஸ், நியூசிலாந்தின் ஷேன் பாண்ட் ஆகியோர் வரிசையில் பாகிஸ்தானைச் சேர்ந்த சோயப் அக்தர் உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களை கூட திணறடிக்கும் பந்துவீச்சாளராக ஜொலித்தார்.
குறிப்பாக 2003 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 161.3 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை வீசிய அக்தர் மாபெரும் உலக சாதனை படைத்தார். அப்படிப்பட்ட வேகத்துக்கு சொந்தக்காரர் சிறுவயதில் எழுந்து நடக்கக் கூட முடியாது என மருத்துவர் எச்சரித்த பின்னணி குறித்து பகிர்ந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பிரபல தி ஏஜ் பத்திரிகையில் பேட்டியளித்துள்ள அவர், எனது 6 வயது வரை என்னால் சரியாக நடக்க முடியாது.அப்போது என்னை பரிசோதித்த மருத்துவர் மற்ற குழந்தைகளை போல வேகமாக ஓட முடியாது எனவும், பாதி ஊனமானவன் என்றும் கூறினார். அந்த சமயத்தில் எனது மூட்டு எலும்புகளில் ஏற்பட்ட வலியை இப்போது நினைத்தாலும் கூட கடினமாக இருக்கும்.
ஆனால் அதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாத அக்தர் கிரிக்கெட் மீது இருந்த காதல் காரணமாக தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டார். நாளடைவில் சர்வதேச கிரிக்கெட்டில் 444 விக்கெட்டுகளை எடுத்து உலகையே மிரட்டும் அதிரடியான வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்து பல சாதனைகளைப் படைத்தார் என்பது வரலாறு.