கடைசிவரை செல்வோம்: வெற்றிக் களிப்பில் ரொனால்டோ
சவுதி புரோ லீக் போட்டியில் அல் நஸர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் அல் அஹ்லி சவுதி அணியை வீழ்த்தியது.
டுரான் கோல்
கிங் அப்துல்லா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடந்த போட்டியில் அல் நஸர் மற்றும் அல் அஹ்லி சவுதி அணிகள் மோதின.
ஆட்டத்தின் 32வது நிமிடத்திலேயே ஜோன் டுரான் (அல் நஸர்) கோல் அடித்தார்.
அதன் பின்னர் இரு அணி வீரர்கள் கடுமையாக மோதியதால் முதல் பாதியில் மேற்கொண்டு கோல் ஏதும் விழவில்லை.
சூடுபிடித்த ஆட்டம்
ஆனால் இரண்டாம் பாதியில் ஆட்டம் சூடுபிடித்தது. 47வது நிமிடத்தில் அல் நஸரின் முஹமது சிமகன் எதிரணி வீரரை கையால் தாக்கினார்.
இதனால் அவருக்கு ரெட் கார்டு காட்டப்பட்டு உடனே வெளியேற்றப்பட்டார். மேலும், அல் அஹ்லி சவுதி அணிக்கு விழுந்த கோலும் மறுக்கப்பட்டது.
பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் அல் அஹ்லி சவுதி வீரர் இவான் டோனி (Ivan Toney) தலையால் முட்டி கோல் (78வது நிமிடம்) அடித்தார்.
அடுத்த 2 நிமிடங்களில் அல் நஸரின் அய்மான் யஹ்யா அடித்த ஷாட்டை கோல் கீப்பர் தடுத்தார். எனினும் வெளியே வந்த பந்தை மீண்டும் மின்னல் வேகத்தில் உள்ளே தள்ளி கோலாக மாற்றினார்.
தனியாளாக கோல்
ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் டுரான், பாதி மைதானத்தில் இருந்து பந்தை தனியாளாக கொண்டு சென்று கோலாக்கினார்.
இந்த கோல் அல் நஸர் அணிக்கு 3வது கோலானது. பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நிமிடத்தில் (90+8) அல் அஹ்லி சவுதி அணி வீரர் சுமாயின் அல் நபிட் கோல் அடித்தார்.
எனினும் அல் நஸர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியின் இரண்டாம் பாதியில் ரொனால்டோ களம் காணவில்லை என்றாலும், "கடைசிவரை வெற்றி தொடரும்" என தனது பதிவில் குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |