அவரை உடனடியாக விடுதலை செய்யுங்கள்: அழுத்தமான கோரிக்கை வைத்த ஜோ பைடன்
கைது செய்யப்பட்டுள்ள ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழுத்தமான கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போன்று அமெரிக்கா இனி ரஷ்ய ஜனாதிபதியிடன் நடந்து கொள்ளாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட முக்கிய கூட்டம் ஒன்றில் கடுமையான விவாதம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டொனால்டு டிரம்பின் கொள்கைகளுக்கு எதிரான மிக அழுத்தமான முடிவுகள் பரிசீலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அமெரிக்காவின் மிக தீவிர போட்டியாளரான சீனா முன்வைத்துள்ள சவால்களை நேரடியாக ஏற்றுக்கொள்வதாகவும் ஜோ பைடன் இந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அமெரிக்காவின் நலன்களை கருத்தில் கொண்டு சீனாவுடன் இணைந்து பணியாற்றவும் தயார் என ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவையும் கடுமையாக விமர்சித்த பைடன், நவால்னி விவகாரம் வெறும் அரசியல் நோக்கம் கொண்டது எனவும்,
அவர் உடனடியாகவும் நிபந்தனை ஏதுமின்றி விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அழுத்தமான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.