இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியா வருகை தந்துள்ள நிலையில், அவருக்கு பாதுகாப்பாக நகரும் அரண் என்று அழைக்கப்படும் ஆராஸ் செனாட் விமானம் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
புடினின் இந்திய சுற்றுப்பயணம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்திய சுற்றுப்பயணத்தின் முக்கிய நிகழ்வாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அத்துடன் இந்த சந்திப்பின் போது இந்தியா - ரஷ்யா இடையிலான மூலோபாய கூட்டாண்மையின் மொத்த நோக்கத்தையும் மறுஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் புடினின் வருகையை முன்னிட்டு அரச விருந்து ஒன்றும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா கொண்டுவரப்பட்ட பாதுகாப்பு அரண்
அவரது பாதுகாப்பு படையின் முக்கிய அம்சங்களில் ஒன்றான நகரும் அரண் என்று அழைக்கப்படும் ஆராஸ் செனாட் (Aurus Senat) அரச பாதுகாப்பு காரும் விமானம் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த ஆராஸ் செனாட் ரஷ்ய ரோல்ஸ் ராய்ஸ் என்று குறிப்பிடப்படும் இது, ரஷ்யாவின் சொகுசு லிமோசின் ஆகும்.

இது ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் அரசு பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
2018 ம் ஆண்டு ரஷ்ய ஜனாதிபதி புடினின் பதவியேற்பு நிகழ்வின் போது இந்த ஆராஸ் செனாட் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் குண்டு துளைக்காத கவச வெளிப்புறம், கருமையான ஜன்னல்கள், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் ஆடம்பரமான உட்புறம் ஆகியவை இதன் தனிச் சிறப்புகள் ஆகும்.
கடந்த 2024ம் ஆண்டு வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ரஷ்யாவிற்கு வந்த போது அவருக்கு இந்த காரை புடின் பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஆராஸ் செனாட் சிறப்பம்சங்கள் என்னென்ன?
இரசாயன பாதுகாப்பு, உயர் ரக குண்டுகள் கூட துளைக்க முடியாத பாதுகாப்பு ஆகியவை இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது.
எத்தகைய வெடிப்பு மற்றும் வான்வழித் தாக்குதல்களையும் எதிர்க்கும் வல்லமை இதன் பாதுகாப்பு திறன் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஆராஸ் செனாட் நீர்மூழ்கிக் கப்பல் போல் செயல்படும் திறன் கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த காரின் நான்கு சக்கரங்களும் செயலிழந்து விட்டாலும், இதில் உள்ள ரன் ஃப்ளாட்(Run Flat) என்ற தொழில்நுட்பம் இதனை அதிவேகமாக நகர செய்கிறது.
மேலும் இதில், 4.4 லிட்டர் hybrid இரட்டை டர்போ v8 இஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் வெறும் 6 முதல் 9 வினாடிகளில் 0-100கி.மீ /மணி வேகத்தை எட்டும். மேலும் இதன் அதிகபட்ச வேகம் 160 Kmph ஆகும்.

ஆராஸ் செனாட் விலை
ஆராஸ் செனாட் காரின் துல்லியமான மதிப்பு தெரியவில்லை. ஆனால் பொதுமக்களுக்கான பதிப்பாக வெளியான ஆராஸ் செனாட் காரின் விலை சுமார் 18 மில்லியன் ரூபிள்(அதாவது ரூ 2.5 கோடி) ஆகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |