பிரான்சில் பொதுமக்கள் மீது காரை மோதிய நபர் ஏற்படுத்திய குழப்பம்: சமீபத்திய தகவல்
பிரான்சில் நபர் ஒருவர் வேண்டுமென்றே மக்கள் கூட்டத்துக்குள் காரை செலுத்தியதில் பலர் காயமடைந்துள்ளனர்.
பிரான்சில் நபர் செய்த துணிகரச் செயல்
நேற்று, அதாவது, நவம்பர் மாதம் 5ஆம் திகதி காலை, பிரான்சில், சுற்றுலாப்பயணிகள் அதிகம் செல்லக்கூடிய Saint Pierre d´Oléron என்னுமிடத்தில், திடீரென ஒருவர் அல்லாஹூ அக்பர் என சத்தமிட்டபடி, மக்கள் கூட்டத்துக்குள் வேண்டுமென்றே காரை செலுத்தினார்.

அத்துடன், காரை விட்டு இறங்கிய அந்த நபர், தன் கார் மீது தீவைக்கவும் முயன்றுள்ளார். அந்தக் காருக்குள் எரிவாயு சிலிண்டர்கள் இருந்தது பின்னர் தெரியவந்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார், அந்த நபர் முரண்டுபிடித்ததால் டேசர் பயன்படுத்தி அவரைக் கைது செய்தனர்.
கார் மோதியதில் பலர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில், நாடாளுமன்ற உறுப்பினரான பாஸ்கல் (Pascal Markowsky) என்பவரின் உதவியாளரான எம்மா (Emma Vallain, 22) என்னும் இளம்பெண் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.

அவருடன் மேலும் இருவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஐந்து பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய உடல் நிலை சீரடைந்துவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
யார் அந்த தாக்குதல்தாரி?
விடயம் என்னவென்றால், அந்த நபர் மக்கள் மீது காரை மோதும் முன் ‘ அல்லாஹூ அக்பர்’ என சத்தமிட்டுள்ளார்.

ஆனால், உண்மையில் அவர் இஸ்லாமியரோ, இஸ்லாமியவாதத்துடன் தொடர்புடையவரோ அல்ல.
அவரது பெயர், ஜீன் கிலோட் (Jean Guillot, 35). அவர் ஒரு பிரெஞ்சு வெள்ளையர்.
ஆக, அவர் எதற்காக இப்படி ஒரு மதத்தினருக்கு பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டார் என்பது தெரியவில்லை.
காவலில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |