உக்ரைனில் வெடிச்சத்தத்துக்கு நடுவில் சுரங்க ரயில் நிலையத்தில் பிறந்த அற்புதக் குழந்தை!
புடின் உக்ரைனியர்களை கொன்று அழிக்க குண்டுகளை வீசிக்கொண்டிருக்க, வெடிச்சத்தத்துக்கு நடுவில் நம்பிக்கைக் கீற்றாக பெண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது.
ஆம், ஒரு பக்கம் மக்கள் ரஷ்ய அதிபரின் நாடு பிடிக்கும் பேராசையால் பலியாகிக்கொண்டிருக்க, மறு பக்கமோ, போராட்டத்துக்கு மத்தியிலும் வாழ்க்கை இன்னமும் தொடரத்தான் செய்யும் என்பதை நிரூபிப்பது போல குழந்தைகள் பிறந்தவண்ணம்தான் உள்ளார்கள்.
அவ்வகையில், உக்ரைன் தலைநகர் Kyivஇல், குண்டுகளுக்குத் தப்ப சுரங்க ரயில் நிலையங்களில் மக்கள் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
நேற்று இரவு 8.30 மணியளவில், போருக்கு நடுவில் உலகைப் பார்க்க வந்த அந்த குழந்தைக்கு மியா என பெயரிடப்பட்டுள்ளது.
பிரசவ வேதனையில் கதறிய அந்த 23 வயது கர்ர்பிணியின் குரலைக் கேட்டு ஓடோடி வந்த உக்ரைன் பெண் பொலிசார் அந்தப் பெண் பிரசவிக்க உதவ, பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
மியாவின் பிறப்பை அற்புதம் என புகழ்கிறார்கள் உக்ரைனியர்கள். இப்படிப்பட்ட மோசமான சூழலில் நாங்கள் இருக்கும் நிலையில், உன் பிறப்பு எங்களுக்கு ஒரு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது என்று கூறி மியாவைப் புகழ்ந்துள்ளார் ஒரு பெண்.
இப்படி யுத்த காலத்தில் பிறந்த குழந்தை மியா மட்டுமல்ல, அவளைப்போலவே மருத்துவமனை ஒன்றின் தரைத்தளத்தில் பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
அந்தப் பெண்ணின் அனுமதியுடன், பிரசவம் பார்த்த மருத்துவர் அந்த தாய் மற்றும் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஆம், அவர்கள் கூறுவது போலவே, மனித இனத்தை அழித்தொழிக்க எத்தனை சர்வாதிகாரிகள் வந்தாலும் முடியாது. ஒரு பக்கம் இறப்பு நிகழும் அதே நேரத்தில் பிறப்பும் இருக்கும் என்பது இயற்கையின் விதி அல்லவா? அதை யாரால் மாற்றக்கூடும்?