அமேசான் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் காத்திருக்கும் அதிர்ச்சி... தொடங்கும் இரண்டாம் கட்டம்
அமேசான் நிறுவனம் மற்றொரு பெரிய அளவிலான ஆட்குறைப்புக்குத் தயாராகி வருவதாகவும், ஜனவரி 27 முதல் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இதனால் பாதிக்கப்படக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் கட்டம்
அமேசான் நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், ஊழியர்களின் மன்றங்களில் நடக்கும் விவாதங்களும், சமீபத்திய ஒழுங்குமுறைத் தாக்கல் ஆவணங்களும், ஆட்குறைப்பின் இரண்டாம் கட்டம் விரைவில் நிகழக்கூடும் என்பதைக் காட்டுகின்றன.

கடந்த அக்டோபர் மாதம், அமேசான் நிறுவனம் பல கட்டங்களாக சுமார் 30,000 பதவிகளை நீக்கத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. முதல் சுற்றில் சுமார் 14,000 பதவிகள் பறிக்கப்பப்பட்டதாகத் தெரிகிறது, மேலும் அந்தச் செயல்முறை ஏற்கனவே நடந்து முடிந்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போது, கூடுதலாக 16,000 வேலைகளுக்கு சிக்கல் ஏற்படக்கூடும் என்றும் தெரிய வருகிறது. வெளியான தகவல்கள் உறுதியானது என்றால், இந்த புதிய பணிநீக்கங்கள் 2023-ல் அமேசான் நீக்கிய 27,000 பதவிகளுக்கு மேலதிகமாக அமையும்.
இது நிறுவனத்தின் வரலாற்றில் மிகப்பெரிய ஆட்குறைப்பு காலகட்டங்களில் ஒன்றாக இருக்கும். இதனிடையே, மேலாளர்களும் மூத்த அதிகாரிகளும் சாத்தியமான வேலை இழப்புகள் குறித்து குழுக்களுக்கு முறைசாரா முறையில் எச்சரிக்கத் தொடங்கியுள்ளதாகவே தகவல் கசிந்துள்ளது.

எச்சரிக்கை அறிவிப்புகள்
ஆனால், இந்தத் தகவல்களின் நம்பகத்தன்மை குறித்தோ அல்லது சாத்தியமான ஆட்குறைப்புகளின் நேரம் குறித்தோ அமேசான் உறுதிப்படுத்தவில்லை.
அமெரிக்க விதிகளின் அடிப்படையில், பெரிய அளவிலான ஆட்குறைப்புத் திட்டமிடப்படும்போது வழங்கப்பட வேண்டிய எச்சரிக்கை அறிவிப்புகளை, 1000 முதல் 2,000 அமேசான் ஊழியர்கள் ஏற்கனவே பெற்றிருக்கலாம் என்று சமீபத்திய ஊடக அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த அறிவிப்புகள் ஜனவரி 26 ஆம் திகதிக்கு முன்னதாக திட்டமிடப்பட்டுள்ள வேலை நீக்கங்களைக் குறிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், பாதிக்கப்படக் கூடிய ஊழியர்களின் உண்மையான எண்ணிக்கை இதைவிட கணிசமாக அதிகமாக இருக்கலாம் என்றே ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |