தொடர்ந்து நான்காவது நாளாக... மொத்தம் ரூ 132000 கோடிகளை இழந்த முகேஷ் அம்பானி
ஆசியாவிலேயே பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி தொடர்ந்து நான்காவது நாளாக பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறார்.
பெரும் பணக்காரர் பட்டியலில்
இந்தியாவின் மிக மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பெரும் நிதி பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதன் பங்குகள் கடுமையான சரிவைக் கண்டுள்ளது.
வெறும் நான்கு நாட்களில் ரூ 132,000 கோடி தொகையை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இழந்துள்ளது. இதனால், அக்டோபர் 4ம் திகதி வரையான தரவுகளின் அடிப்படையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 18.76 லட்சம் கோடிகளுக்கு சரிவடைந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் ரூ 20 லட்சம் கோடிகளுக்கும் அதிகமாக இருந்துள்ளது. வெள்ளிக்கிழமை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையில் ரூ 42.45 சரிவடைந்துள்ளது.
நான்கு நாட்களில் பெரும் சரிவை எதிர்கொண்டாலும், இந்தியாவின் பெரும் பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு, அக்டோபர் 4ம் திகதி வெளியான தரவுகளின் அடிப்படையில் ரூ 916,055 கோடி என்றே தெரிய வருகிறது.
கச்சா எண்ணெய் விலை
சமீப நாட்களாக பங்குச் சந்தையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம் சென்செக்ஸ் 703.95 புள்ளிகள் அல்லது 0.85 சதவீதம் சரிந்தது.
அதேவேளை நிஃப்டி 200.25 புள்ளிகள் அல்லது 0.79 சதவீதம் சரிந்தது. மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் தொடர்ச்சியாக வெளிநாட்டு முதலீடுகளின் வெளியேற்றம் ஆகியவை காரணமாக சந்தை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தவிர, உலக அரசியல் பதட்டங்கள் காரணமாக விநியோக நிச்சயமற்ற தன்மையால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் அதிகரிப்பு சந்தை உணர்வுகளை பாதித்தது என்றும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |