Electoral bonds நன்கொடை: அம்பானி பெயர் இல்லை.., கோடியை அள்ளிக்கொடுத்த லொட்டரி மார்ட்டின்
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் தொழில் நிறுவனங்கள் வழங்கிய நன்கொடை பட்டியல் விவரம் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திரம் ரத்து
தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என்றும், வங்கிகள் அவற்றை விற்பனை செய்ய தடை விதிப்பதாகவும் உச்சநீதிமன்றம் பிப்ரவரி 15 -ம் திகதி தீர்ப்பளித்துள்ளது.
தேர்தல் பத்திரம் முறை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என்றும், நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.
இதனால், தேர்தல் நன்கொடை அளிக்க வகை செய்த வருமான வரி திருத்தச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ திருத்தச் சட்டம் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. மேலும், தேர்தல் பத்திரம் சட்டம் ரத்து செய்வதோடு , கம்பெனி சட்டத் திருத்த மசோதாவும் ரத்து செய்யப்படுகிறது.
இதன்படி, எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் நேற்று முன்தினம் வழங்கியது.
இந்நிலையில், தற்போது அந்தப் பட்டியலைத் தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
நன்கொடை விவரங்கள்
இந்தியாவின் முன்னணி கட்சிகளான பாஜக, காங்கிரஸ், அதிமுக, சிவசேனா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக, ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி ஆகியவை தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற்ற கட்சிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
அதில், 6060 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்று பாஜக முதலிடத்திலும், 1609 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இரண்டாம் இடத்திலும், 1421 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்று காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இதனிடையே, அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்த நிறுவனங்கள் பட்டியலில் ரூ.1368 கோடியை வழங்கி லொட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. ரூ.400 கோடி வழங்கி வேதாந்தா நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்த நன்கொடை பட்டியலில் பெரும் தொழிலதிபர்களான அம்பானி, அதானி, டாடா ஆகியோரின் நிறுவனங்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |