சட்ட அராஜகம்! ஜேர்மனி புரிந்துகொள்ளும்..ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ரஷ்ய தூதர் எச்சரிக்கை
முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களை பயன்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டத்திற்கு, ஜேர்மனிக்கான ரஷ்ய தூதர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ரஷ்ய சொத்துக்களைப் பயன்படுத்தும் திட்டம்
ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் மீதான அழுத்தம் போர்க்களத்தில் அதிகரித்து வருவதாக, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் உக்ரைனுக்கு ஆதரவான நடவடிக்கையாக திட்டத்தை முன் வைத்தனர். 
அதுதான் உக்ரைனின் போராட்டத்திற்கு நிதியளிக்க, முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களைப் பயன்படுத்தும் திட்டம் ஆகும்.
இந்த திட்டத்தின் நோக்கம், பெரும்பாலான சொத்துக்கள் வைத்திருக்கும் பெல்ஜியத்தின் எதிர்ப்பையும் மீறி, முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களைப் பயன்படுத்தி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் உக்ரைனுக்கு 90 பில்லியன் யூரோக்களை நிதியளிக்க உதவுவதாகும்.
தூதர் எதிர்ப்பு
ஆனால், ஜேர்மனிக்கான ரஷ்ய தூதரான செர்ஜி நேக்கேவ் (Sergei Nechaev) ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், "ரஷ்யாவின் ஒப்புதல் இல்லாமல் இறையாண்மை கொண்ட அதன் சொத்துக்களைக் கொண்ட எந்தவொரு நடவடிக்கையும் திருட்டிற்கு சமம். ரஷ்ய அரசின் நிதிகளை திருடுவது நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் வணிக நற்பெயரை அழித்து, ஐரோப்பிய அரசாங்கங்களை முடிவில்லாத வழக்குகளில் தள்ளக்கூடும்" என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "உண்மையில், இது சட்ட அராஜகத்திற்கும் உலகளாவிய நிதி அமைப்பின் அடித்தளங்களை அழிப்பதற்கும் ஒரு பாதையாகும். இது முதன்மையாக ஐரோப்பிய ஒன்றியத்தைத் தாக்கும். இந்த விடயத்தை பெல்ஜியம் மற்றும் ஜேர்மனி புரிந்துகொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம்" எனவும் கூறியுள்ளார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |