நடுவானில் அத்துமீறிய விமானப்பயணி: விமானியின் அதிரடி முடிவு
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் இருந்து வாஷிங்டன் நகருக்கு புறப்பட்ட விமானம், கட்டுப்படுத்த முடியாத பயணி ஒருவரின் செயலால் பாதி வழியில் கன்சாஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 1775 என்ற விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் இருந்து வாஷிங்டன் நகருக்கு புறப்பட்டுள்ளது.
விமானம் பாதி வழியில் பறந்து சென்று கொண்டு இருக்கும் போது பயணி ஒருவர் அத்துமீறி விமான கதவுகளை திறக்க முற்பட்டுள்ளார்.
இதனை உணர்ந்த விமான பணியாளர்கள் உடனடியாக செயல்பட்டு அந்த அத்துமீறிய பயணியை கட்டுப்படுத்தி, விமானத்தை கன்சாஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 2:28 மணிக்கு பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் இருந்து புறப்பட்ட மூன்று மணி நேரத்திலேயே விமானம் தரையிறக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த சம்பவம் குறித்து அமெரிக்க விமான நிறுவனம் தெரிவித்துள்ள அறிக்கையில், கட்டுப்படுத்த முடியாத அத்துமீறிய பயணி ஒருவரால் விமானம் கன்சாஸ் நகரில் தரையிறக்கப்பட்டுள்ளது.
மேலும் விமான பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டதால் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடிந்ததாக தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த விமான பயணி ஒருவர் தெரிவிக்கையில், திடீரென விமானத்தின் விளக்குகள் அனைத்தும் போடப்பட்டு, சில பேர் அவசர அவசரமாக முதல் வகுப்பை நோக்கி ஓடியது பயணிகளை மிகவும் அச்சுறுத்தியதாகவும், ஆனால் சிறுது நேரத்துக்குள் விமானம் கன்சாஸ் நகரில் தரை இறக்கப்பட்டுவிட்டது என தெரிவித்துள்ளார்.