20 ஆண்டுகள் ஆன பிறகும் குலை நடுங்கும் அமெரிக்கா! தாலிபான்களால் இன்னும் அதிகரிக்கும் பயம்
அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்து 20 வருடங்கள் நிறைவடைய உள்ள நிலையிலும், அதை நினைத்து இன்றும் மக்கள் மிகவும் பயந்து நடுங்குவதாக ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் திகதி அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் அமைந்திருந்த உலக வர்த்தக மையம் அல்-கொய்தா பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது.
மிகவும் பிரபலமான வானுயர்ந்த அந்த வர்த்தக மையத்தின் தெற்கு மற்றும் வடக்கு ஆகிய இரண்டு வளாகங்களும், இரண்டு வெவ்வேறு பயணிகள் விமானங்களை கொண்டு மோதி தாக்குதல் நடத்தப்பட்டது.
அதே நாளில், விர்ஜினியாவில் உள்ள அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் மற்றும் பென்சில்வேனியாவிலும் என மொத்தம் நான்கு தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
ஒட்டுமொத்த அமெரிக்காவையும் நடுநடுங்கவைத்த இந்த பயங்கர தாக்குதல் சம்பவத்தில் கிட்டத்தட்ட 3,000 பேர் பலியாகினர், ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த கொடூர தாக்குதல் நடந்து, சரியாக இன்னும் ஒரு வாரத்தில் 20 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றுவதற்கு முன் சேகரிக்கப்பட்ட தகவல்கள், இந்த இரட்டை கோபுர தாக்குதல்களைப் பற்றி இன்னும் நிறைய பேர் பயப்படுவதாக தெரிவிக்கின்றன.
அமெரிக்கர்களில் பெரும்பாலோர் இந்த தாக்குதலின்போது தாங்கள் எங்கே இருந்தார்கள் மற்றும் என்ன செய்தார்கள் என்ற தெளிவான நினைவுகளைக் கொண்டுள்ளனர். இந்த மக்கள், இப்போதுகூட விமானங்களில் பயணிப்பதற்கும், வானளாவிய கட்டிடத்திற்கு செல்வதற்கும் பயப்படுகிறார்கள்.
ஏறக்குறைய 26 சதவிகித அமெரிக்கர்கள் இப்போது விமானங்களில் பறக்க பயப்படுகிறார்கள் மற்றும் 36 சதவிகிதம் பேர் வெளிநாடு செல்வதற்கு தயங்குகிறார்கள்.
இது தவிர, 27 சதவீத மக்கள் வானளாவிய கட்டிடத்திற்குள் நுழைய விரும்பவில்லை மற்றும் 37 சதவீதம் பேர் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் எந்த நிகழ்வையும் தவிர்க்க முயற்சிப்பதாக ஒப்புக்கொண்டனர்.
அப்போதைய சூழ்நிலையை அனுபவித்த மக்களின் எண்ணிக்கைகள் குறைந்துவிட்டாலும், பயம் இன்னும் பல தசாப்தங்களுக்குப் பிறகும் தொடர்கிறது.
மேலும் சிலர் ஆப்கானிஸ்தானை தாலிபான் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதால், அந்த பயமானது இப்போது மேலும் அதிகரிக்கக்கூடும் என்று நம்புகிறார்கள்.
தற்போதைய ஆப்கான் நெருக்கடிக்கு முன்பே, 22 சதவிகித அமெரிக்க மக்கள் பயங்கரவாதிகள் தான் போரை வெல்வதாக நம்பினர்.
கிட்டத்தட்ட 36 சதவிகித மக்கள், அமெரிக்க அரசாங்கம் தனது குடிமக்களை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க முடியுமோ இல்லையோ, ஏதேனும் ஒரு பயங்கரவாத தாக்குதல்களுக்கு பலியாகிவிடுவோம் என்று கவலைப்படுவதாக கூறியுள்ளனர்.