அமெரிக்காவில் குரங்கம்மை தொற்றின் மையம் இந்த நகரத்தில் தான்: சுகாதாரத்துறை எச்சரிக்கை
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐந்தாவது ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 22 என அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க் நகரில் புதிதாக குரங்கம்மை தொற்றுக்கு இலக்கான ஐந்தாவது நபர் தொடர்பில் மேலதிக தகவல்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்னமும் வெளியிடவில்லை.
ஆனால், 8 மில்லியன் மக்கட்தொகை கொண்ட நியூயார்க் நகரம் தற்போது குரங்கம்மை தொற்றின் மையமாக மாறியுள்ளது என அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
நேற்று மட்டும் சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பிலடெல்பியா பகுதிகளில் நால்வருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச பயணத்திலிருந்து சமீபத்தில் நாடு திரும்பிய ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் இருபால் ஈர்ப்பாளர்களில் பெரும்பாலான பாதிப்பு கண்டறியப்படுகின்றன.
மேலும், அமெரிக்காவை விட்டு வெளியே பயணிக்காத நபர்களுக்கும் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே உலக நாடுகளில் இதுவரை 700 பேர்களுக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
பெரும்பாலான எண்ணிக்கை ஸ்பெயின்(208) நாட்டிலும், பிரித்தானியாவில் 206 பேர்களுக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. போர்த்துகல் நாட்டில் 138 பேர் குரங்கம்மை பாதிப்பால் சிகிச்சையில் உள்ளனர்.
பாதுக்காப்பற்ற உடல் உறவால் குரங்கம்மை தொற்று பெருமளவும் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் இருபால் ஈர்ப்பாளர்களிடையே பெரும்பாலான பாதிப்பு எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளதால் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.