ஹமாஸ் படைகளின் அக்டோபர் தாக்குதல் பின்னணியில் அமெரிக்க கோடீஸ்வரர்: வெளிவரும் புதிய தகவல்
இஸ்ரேலில் ஹமாஸ் படைகள் முன்னெடுத்த அக்டோபர் தாக்குதல் தொடர்பில் பாலஸ்தீன வம்சாவளி அமெரிக்க கோடீஸ்வரர் மீது பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பெரும் கோடீஸ்வரர்
உலகின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவர் என்று ஒரு காலத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பஷார் மஸ்ரி என்பவர் மீதே தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஹமாஸ் படைகள் இஸ்ரேல் எல்லையில் தாக்குதலை நடத்துவதற்குத் தேவையான உள்கட்டமைப்பைக் கட்ட அனுமதித்ததாக பஷார் மஸ்ரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அக்டோபர் 7ம் திகதி நடந்த தாக்குதலை அடுத்தே, இஸ்ரேல் இராணுவம் போர் பிரகடனம் செய்ததுடன், பழிவாங்கும் நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்ட மிக மோசமான தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 50,000 கடந்துள்ளது.
சமீபத்தில் இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில், சம்பவத்தன்று கொல்லப்பட்ட இஸ்ரேல் மக்களின் எண்ணிக்கை 380 இருக்கலாம் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரின் குடும்பத்தினருடனும் நேரிடையாக விசாரணை முன்னெடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ள பஷார் மஸ்ரி என்பவர் கட்டுமான நிறுவனங்களை நடத்தும் பெரும் கோடீஸ்வரராவார். காஸாவில் தமது நிலத்திற்கு கீழே ஹமாஸ் படைகள் சுரங்கப்பாதைகள் நிறுவுவதை அவர் அறிந்திருந்தார் என்றும், இங்கிருந்தே இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே சுரங்கப்பாதையில் இஸ்ரேல் பணயக்கைதிகளை தங்க வைத்ததுடன், ஆயுதங்களையும் சேமித்து வைத்திருந்தனர். உலகப் பொருளாதார மன்றத்தால் நாளைய உலகளாவிய தலைவராக மஸ்ரி அடையாளபப்டுத்தப்பட்டிருந்தார்.
தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்ய கோரிக்கை வைத்துள்ளார். அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவரோ அல்லது அவரது நிறுவனங்களோ ஒருபோதும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை அல்லது வன்முறை மற்றும் போர்க்குணத்திற்கு ஆதரவளித்ததில்லை என்று விளக்கமளித்துள்ளது.
ஹமாஸ் படைகள்
வாஷிங்டனில் மஸ்ரிக்கு சொந்தமாக குடியிருப்பு இருப்பதால், வாஷிங்டனில் உள்ள ஃபெடரல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 7 தாக்குதல் நடக்கப் போகிறது என்பது மஸ்ரிக்குத் தெரியும் என்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்படவில்லை,
மாறாக ஹமாஸ் படைகள் ஆயுதங்களை சேமித்து வைத்துள்ளது அவருக்குத் தெரியும் என்று மட்டுமே குற்றம் சாட்டுகிறது. அத்துடன் காஸாவில் மஸ்ரியின் முதலீடுகள் ஹமாஸ் படைகளுக்கு நேரடியாகப் பயனளித்ததாகவும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மஸ்ரியின் இரண்டு ஹொட்டல்களை ஹமாஸ் படைகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர். குறித்த ஹொட்டல்கள் இரண்டும் இஸ்ரேல் தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் படைகளின் அக்டோபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டதாக கூறும் 200 பேர்கள் இணைந்தே மஸ்ரி மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மஸ்ரியின் முன்னாள் வணிக கூட்டாளியான இயல் வால்ட்மேன் என்பவரும் வழக்கு தொடர்ந்துள்ள 200 பேர்களில் ஒருவர். இவரது மகள் அக்டோபர் 7 தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |