இளவரசி கேட்டை கேலி செய்த அமெரிக்க ஊடகவியலாளர்: பகிரங்க மன்னிப்புக் கோரினார்
இளவரசி கேட்டை கேலி செய்த அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவர் தனது செயலுக்காக பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார்.
எழுந்த சர்ச்சை
இளவரசி கேட் அறுவை சிகிச்சைக்குப் பின் பொதுவெளியில் தலைகாட்டாததால் எழுந்த சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காக சில புகைப்படங்களை வெளியிட்டார். அவற்றில் ஒரு புகைப்படத்தில், இளவரசர் வில்லியம் முகம் தெளிவாகத் தெரிய, அவர் அருகில் அமர்ந்திருந்த இளவரசி கேட்டின் முகம் தெளிவாகத் தெரியவில்லை.
உடனே, அது இளவரசி கேட்டே இல்லை, அது இளவரசர் வில்லியமுடைய ரகசிய காதலியான Rose Hanbury என்னும் பெண் என்ற வதந்தி வேகமாகப் பரவத் துவங்கியது.
Image: BBC Studios
வெளிப்படையாக அவமதித்த அமெரிக்க தொலைக்காட்சி
இதற்கிடையில், அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியான The Late Show என்னும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவரான Stephen Colbert என்பவர், இளவரசி கேட் பொதுவெளியில் முகம் காட்டாததால் அவரது திருமணத்தில் பிரச்சினை என்றும், Rose Hanbury, இளவரசர் வில்லியமுடைய ரகசிய காதலி என்றும், வில்லியமுக்கும் ரோஸுக்கும் தவறான உறவு இருந்ததாகவும் வெளிப்படையாக கூறி கேலி செய்தார்.
பகிரங்க மன்னிப்பு
இப்படி பலரும் இளவரசி கேட்டை கேலி செய்துகொண்டிருக்க, திடீரென அவர் தனக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதாகவும், தான் சிகிச்சையிலிருப்பதாகவும் தெரிவிக்க, அவரை கேலி செய்த பலரும் அதிர்ச்சியடைந்தார்கள், சிலர் மன்னிப்பும் கோரினார்கள்.
இந்நிலையில், The Late Show நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவரான Stephen Colbertம், இளவரசி கேட்டை கேலி செய்ததற்காக மன்னிப்புக் கோரியுள்ளார்.
எந்த நிகழ்ச்சியில் இளவரசியை கேலி செய்தாரோ, அதே நிகழ்ச்சியில் Stephen Colbert இளவரசி கேட்டிடம் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார்.
நாங்கள் பல நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். அவற்றை நீங்கள் கவனித்திருப்பீர்களானால், எந்த விடயத்தை எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்களோ, அதைக் குறித்து நாங்களும் நகைச்சுவையாக பேசுவதுண்டு.
கிட்டத்தட்ட ஆறு வாரங்களாக இளவரசி கேட் பொதுவெளியில் தலைகாட்டாதது குறித்துதான் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நாங்களும் எங்கள் நிகழ்ச்சியில் அவரை வைத்து நகைச்சுவையாக பேசினோம். அப்போதே அது பலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.
அதற்குப் பிறகுதான் கேட் மிடில்டனுக்கு புற்றுநோய் என்பதே தெரியவந்தது. எனது நகைச்சுவை பலரை வருத்தமுறச் செய்துள்ளது உண்மைதான், எதிர்காலத்திலும் அப்படி நடக்கலாம்.
ஆனால், நான் ஒரு விடயத்தை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் எப்போதுமே மற்றவர்களுடைய சோகத்தை, கஷ்டத்தை, துன்பத்தை வைத்து நகைச்சுவை செய்ததில்லை. ஒருவருக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ள விடயம், அவரையும், அவரது குடும்பத்தையும் நிச்சயம் கடுமையாக பாதிக்கும் என்பதில் எந்த சந்தேகமில்லை.
மேலும், ராஜ குடும்பம் என்னிடமிருந்து நிச்சயம் இதை எதிர்பார்க்காது என்பது எங்களுக்குக் தெரியும். என்றாலும், நானும் எனது தொலைக்காட்சி நிகழ்ச்சிக் குழுவினரும், கேட் மிடில்டன் விரைவில் குணமடைய மனதார வாழ்த்துகிறோம் என்றும் கூறியுள்ளார் Stephen Colbert.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |