பட்டத்து இளவரசரின் படுகொலை... திகிலூட்டும் 3 கணிப்புகளை வெளியிட்ட அமெரிக்க நாஸ்ட்ராடாமஸ்
American Nostradamus makes 3 chilling predictions for 2028: அமெரிக்க நாஸ்ட்ராடமஸ் 2028-ஆம் ஆண்டு குறித்து அச்சமூட்டும் 3 கணிப்புகளை முன்வைக்கிறார்.
அமெரிக்காவின் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் ஒருவர், அணு ஆயுதத் தாக்குதல்கள், அமெரிக்காவின் அதிகார வீழ்ச்சி மற்றும் 27 ஆண்டுகள் நீடிக்கப்போகும் உலகப் போர் தொடர்பிலான மூன்று கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா வீழ்ச்சி
2028-ஆம் ஆண்டிற்குள் உலகம் பெரும் கொந்தளிப்பைச் சந்திக்கக்கூடும் என்றும் அமெரிக்காவின் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் ஜான் ஹோக் கூறுகிறார்.

அமெரிக்க எழுத்தாளர் மற்றும் ஆய்வாளரான ஜான் ஹோக், மர்மமான தீர்க்கதரிசனங்களுக்குப் பெயர் பெற்ற புகழ்பெற்ற பிரெஞ்சு ஜோதிடர் நாஸ்ட்ராடமஸ் என்பவருடன் தொடர்புடைய கணிப்புகளை நான்கு தசாப்தங்களாக ஆய்வு செய்து வருகிறார்.
இவருடைய கணிப்புகள் அனைத்தும், பிரெஞ்சு ஜோதிடர் நாஸ்ட்ராடமஸின் அந்தப் பழைய நூல்கள் குறித்த இவருடைய விளக்கங்களையும், ஜோதிடத்தையும் அடிப்படையாகக் கொண்டவை.
இந்த நிலையில், அதிரவைக்கும் 3 கணிப்புகளை ஜான் ஹோக் தற்போது வெளியிட்டுள்ளார். அதில், நியூயார்க்கில் செப்டம்பர் தாக்குதல் நடந்த 27 ஆம் நினைவேந்தல் நாளில், அதாவது 2028 செப்டம்பர் 11 ஆம் திகதி ஏகாதிபத்திய அமெரிக்கா வீழ்ச்சியடைந்திருக்கும் என்கிறார்.
செப்டம்பர் 2026 முதல், அமெரிக்காவின் வீழ்ச்சி தொடங்கும் என்றும், அது 2028 செப்டம்பர் வரையில் நீடிக்கும் என்றும் ஜான் ஹோக் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு ஆண்டுகள், அமெரிக்காவின் அதிகாரத்திலும் உலகளாவிய செல்வாக்கிலும் மீளமுடியாத இழப்பை ஏற்படுத்தும் என்கிறார்.

அமெரிக்காவின் வீழ்ச்சிக்கு டொனால்ட் ட்ரம்ப் ஒரு காரணமாக அமைந்திருப்பது போன்று, ஜான் ஹோகின் இன்னொரு கணிப்பின் மையப்புள்ளியாகவும் ட்ரம்ப் இருக்கிறார்; அது ஈரான் மீது அமெரிக்கா அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்ததாகும்.
ஈரான் மீது மீண்டும் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டால், அது ஆரம்ப இலக்கையும் தாண்டிப் பரவக்கூடிய பதிலடி நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் ஜான் ஹோக் கூறுகிறார்.
சாத்தியமான இலக்கு
பிக்காக்ஸ் மலை உள்ளிட்ட ஈரானின் நிலத்தடி அணுசக்தி நிலையங்களை, பூமியைத் துளைக்கும் அணு ஆயுதங்களுக்கான சாத்தியமான இலக்குகளாக ஜான் ஹோக் அடையாளம் காட்டுகிறார்.
இதற்குப் பதிலடியாக, ஈரான் மற்றும் வட கொரியாவின் ஏவுகணைகள், ஆபத்தான் ட்ரோன்கள் உள்ளிட்டவை அரபிக்கடலில் உள்ள அமெரிக்க கடற்படைக் கப்பல்களைக் குறிவைக்கும்.

இதனால், அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பல்கள் கடுமையாக சேதமடையலாம் அல்லது மூழ்கடிக்கப்படலாம் என்றும், அதில் ஆயிரக்கணக்கான மாலுமிகளும் கடற்படை வீரர்களும் கொல்லப்படலாம் என்றும் ஜான் ஹோக் குறிப்பிடுகிறார்.
அத்துடன், உக்ரைனில் ஐரோப்பாவின் நேரடித் தலையீடு, ஆயுதத் தொழிற்சாலைகள் மீது ரஷ்யா அதிவேகத் தாக்குதல்களை நடத்தத் தூண்டக்கூடும் என்று ஜான் ஹோக் கூறுகிறார்.
மூன்றாவதாக, 27 வருடங்கள் நீடிக்கும் போர் தொடர்பில் பிரெஞ்சு ஜோதிடர் நாஸ்ட்ராடமஸின் கணிப்புக்கு ஜான் ஹோக் தற்போது விளக்கமளித்துள்ளார்.
அதில், Mabus என்ற பெயருடைய ஒருவர் கொல்லப்படுவதுடன், அந்த 27 வருடங்கள் நீடிக்கும் போர் தொடங்கும் என்கிறார். பிரெஞ்சு ஜோதிடர் நாஸ்ட்ராடமஸ் குறிப்பிட்டுள்ள அந்த Mabus என்பவர், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் என்றே ஜான் ஹோக் அடையாளப்படுத்துகிறார்.
பொதுவாக ‘MBS’ என்று அழைக்கப்படுபவர் சவுதி பட்டத்து இளவரசர். திட்டமிட்ட ஒரு படுகொலை, அரண்மனை சதி அல்லது ஏதேனும் விமான விபத்து அல்லது குண்டு வீச்சின் காரணமாக அந்த Mabus என்பவர் இறக்கக்கூடும் என்றும், அது அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படக்கூடிய ஒரு மோதலைத் தூண்டக்கூடும் என்றும் ஹோக் கருதுகிறார்.

இந்த மோதல் மேற்கு ஆசியா முழுவதிலும் உள்ள எண்ணெய், ஹீலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் தொழில்களை அழித்து, எரிசக்தி விநியோகத்தைப் பேரழிவிற்கு உள்ளாக்கும் என்கிறார்.
இதன் விளைவாக, நீண்டகாலப் பஞ்சம், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் குழப்பம் ஆகியவை நிகழும் என்றும்; இவை மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்கும் என்கிறார் ஜான் ஹோக்.
மூன்று கணிப்புகளும் திகிலூட்டுவதாக இருந்தாலும், இந்தக் கணிப்புகள் ஒரு விழிப்புணர்வு எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும் என்றும், மக்கள் வன்முறைக்கு மாறாக அமைதியைத் தெரிவு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்றும் தான் விரும்புவதாக ஹோக் கூறுகிறார்.