தேர்தல் முடிய காத்திருக்கும் ட்ரம்ப்... மத்திய கிழக்கில் ரகசியமாகக் குவிக்கப்படும் இராணுவம்
Trump reportedly planning new attack on Iran after midterm elections: இடைத்தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீது புதிய தாக்குதல் நடத்த ட்ரம்ப் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.
டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் மீது ஒரு பெரிய தாக்குதலை நடத்தத் திட்டமிட்டு வருவதாகவும், இது பெரும்பாலும் இடைக்காலத் தேர்தல்களுக்குப் பிறகு நடைபெறக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
96 மணி நேரத்திற்குள்
இந்த ராணுவ நடவடிக்கையானது, முன்னெப்போதும் கண்டிராத அளவுக்குப் பெரிய அளவில் எரிசக்தி, அணுசக்தி மற்றும் ராணுவக் கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டிருக்கும் என்றும் அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

ஜனாதிபதியிடமிருந்து உத்தரவு கிடைத்த 96 மணி நேரத்திற்குள் தாக்குதலைத் தொடுக்கத் தயாராக இருக்கும் கூடுதல் வீரர்களை மத்திய கிழக்கில் ரகசியமாக நிலைநிறுத்தி வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது.
சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறியிருந்தார்.
கடந்த வாரம், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்குத் தனது ஆதரவை ட்ரம்ப் மீண்டும் வலுவாக உறுதிப்படுத்தினார். ஈரானில் தொடங்கிய வேலையை முடிப்பதற்காக, செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள தேர்தலில் தற்போதைய பிரதமருக்கு வாக்களிக்குமாறு இஸ்ரேலியர்களை அவர் வலியுறுத்தினார்.
ஈரான் மீது இன்னொரு வலுவானத் தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் கூறி வருவது, இஸ்ரேலில் நெதன்யாகுவின் தேர்தல் வெற்றிக்கு உதவும் பொருட்டே என்றும் சில அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், நீங்கள் வாக்குப்பதிவிற்குச் செல்லும்போது, நெதன்யாகு ஒரு மிகச்சிறந்த, போர்க்குணமிக்க பிரதமராகச் செயல்பட்டவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், மிகவும் தீய மனிதர்கள் சிலர், இஸ்ரேலை சிறிய சாத்தான் என்றும், அமெரிக்காவை பெரிய சாத்தான் என்றும் குறிப்பிடுகின்றனர். அமெரிக்கா ஒழிக, இஸ்ரேல் ஒழிக என்று உலகம் முழுவதும் முழங்கப்படும் அந்த முழக்கம் இனி இருக்க முடியாது; இருக்கவும் மாட்டாது என்றார்.
சதித்திட்ட முயற்சிகள்
அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு நடைபெறும் முதல் தேசியத் தேர்தலில் இஸ்ரேலியர்கள் செவ்வாய்க்கிழமை வாக்களிக்க உள்ளனர்; இது நெதன்யாகுவின் தலைமை குறித்த ஒரு பொது வாக்கெடுப்பாகவே பரவலாகக் கருதப்படுகிறது.

இதனிடையே, கடந்த வாரம், அமெரிக்க அதிகாரிகளைக் குறிவைப்பதற்கான முயற்சிகளை ஈரான் கணிசமாக அதிகரித்துள்ளது என வகைப்படுத்தப்படாத குறிப்பாணை ஒன்றில் உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.
அக்டோபர் 23 திகதியிட்ட அந்தக் குறிப்பாணை, தேசிய உளவுத்துறை இயக்குநர் ஜே கிளேட்டனால் வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோவுக்கு அனுப்பப்பட்டது.

அமெரிக்கக் குடிமக்களுக்கு எதிரான ஈரானியர்களின் கொடிய சதித்திட்ட முயற்சிகள், மத்திய கிழக்கு மற்றும் வேறு சில நாடுகளில் முற்றிய கட்டத்தை எட்டியுள்ளன என்று கிளேட்டன் அந்த ஒரு பக்கக் குறிப்பில் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில், ஈரானிடமிருந்து தாக்குதல் முன்னெடுக்கக்கூடும் என்ற சாத்தியத்திற்கு பதிலளிக்கும் விதமாக, ஜோர்டான், லெபனான், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கில் உள்ள பல அமெரிக்கத் தூதரகங்களில் அமெரிக்கா தனது பணியாளர்களின் எண்ணிக்கையை மாற்றியமைத்துள்ளது.
மட்டுமின்றி, அவசரக்காலப் பணிகளில் ஈடுபடாத அரசு ஊழியர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் சவுதி அரேபியாவை விட்டு வெளியேறுமாறும் அமெரிக்கா புதன்கிழமை உத்தரவிட்டது.