ரஷ்ய கப்பலை உக்ரைன் தாக்குவதற்கு சற்று முன் வானில் பறந்த அமெரிக்க கண்காணிப்பு விமானம்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவல்
ஏப்ரல் 13ஆம் திகதி, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் நினைவாக பெயரிடப்பட்ட பிரபல ரஷ்யக் கப்பலான மாஸ்க்வா, உக்ரைன் படைகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
முதலில், கப்பலுக்குள் தீப்பற்றியதால் அது எரிந்து போனதாக கதைவிட்ட ரஷ்யா, பிறகு வேறு வழியில்லாமல் உண்மையை ஒப்புக்கொண்டது.
இதற்கிடையில், மாஸ்க்வா கப்பல் தாக்கப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன், அந்தக் கப்பல் நிற்கும் கருங்கடல் பகுதியில், வான்வெளியில், அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று பறந்ததாக தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
P-8 Poseidon aircraft என்னும் அந்த விமானம் கருங்கடல் வான்வெளியில் பறந்த சிறிது நேரத்திற்குப் பிறகே மாஸ்க்வா கப்பல் தாக்கப்பட்டுள்ளது.
அதாவது, அந்த விமானம் வானில் பறந்து சில மணி நேரங்கள் மாஸ்க்வா கப்பலை ட்ராக் செய்து, அது எங்கு நிற்கிறது என துல்லியமாக அதன் இருப்பிடத்தை உக்ரைன் இராணுவத்துக்கு தெரியப்படுத்தியதாக டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 13ஆம் திகதி, மாஸ்க்வா கப்பல் தாக்கப்படுவதற்கு சில மணி நேரம் முன்பு, சிசிலித் தீவிலுள்ள விமான தளம் ஒன்றிலிருந்து புறப்பட்டுள்ளது P-8 Poseidon aircraft என்ற அந்த கடற்படை கண்காணிப்பு விமானம்.
கருங்கடல் கரைப்பகுதியை அடைவதற்கு முன், தனது ட்ராக்கர்களை அணைத்துவிட்டிருக்கிறது அந்த விமானம். அதாவது, அதற்குப் பின் அந்த விமானத்தை இணையம் மூலம் ட்ராக் செய்ய முடியாது.
அதற்குப் பிறகு, மூன்று மணி நேரம் எங்கிருந்தது என கண்டுபிடிக்கப்படாமலே ’மறைந்திருந்த’ அந்த விமானம் பிறகு ராடாரில் மீண்டும் காணப்பட்டிருக்கிறது. அந்த இடைப்பட்ட நேரத்தில்தான் மாஸ்க்வா கப்பல் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அமெரிக்கா, மாஸ்க்வா கப்பல் தாக்கப்படுவதற்கு உக்ரைனுக்கு உதவியதா என்பது குறித்த தகவலை உறுதி செய்ய அமெரிக்க கடற்படை மறுத்துவிட்டது.