கறுப்பின சிறுவன் மீது திருட்டுப் பழி சுமத்திய அமெரிக்க பெண்ணுக்கு நேர்ந்த கதி!
தன்னுடைய விலையுர்ந்த போனை திருடியதாக கறுப்பின சிறுவன் மீது வீண்பழி சுமத்தி, பொது இடத்தில் வைத்து தாக்கிய அமெரிக்க பெண் மீது பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 22 வயதான மியா பொன்செட்டோ என்ற பெண், நியூ யார்க் நகரத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற சற்று நேரத்தில் அவரது ஐபோன் தன்னிடம் இல்லாததை அறிகிறார்.
அதேநேரம் அவருக்கு அருகில் இருந்த 14 வயதே ஆகும் கறுப்பின சிறுவனுடன் ஒரு ஐபோன் இருப்பதை பார்த்துள்ளார். சற்றும் யோசிக்காமல் தனது போனைத் தான் சிறுவன் திருடியுள்ளான் என முடிவு செய்துள்ளார்.
பொது இடம் என்றும் பார்க்காமல், சிறுவன் வைத்திருப்பது தனது போனா என உறுதி செய்யாமல், உடனடியாக அந்த சிறுவனை இழுத்து தாக்கியுள்ளார் மியா.
சிறுவனின் தனத்தை மற்றும் அங்கிருந்தவர்கள் என்னவென்று கேட்கவே, தனது ஐபோனை சிறுவன் திருடிவிட்டான் என வீண்பழி சுமத்தியுள்ளார்.
சிறுவனும் அவனது தந்தையும் போன் தங்களுக்கு சொந்தமானது, தரமுடியாது எனக் கூறியுள்ளனர்.
இருப்பினும் அதனை நம்பாமல், போனை வாங்காமல் இங்கிருந்து போக மாட்டேன் எனக் கூறி மீண்டும் சிறுவனை தாக்க முயன்றுள்ளார்.
அந்தப் பெண்ணின் மடத்தனமான செயலை சிறுவனின் தந்தை தனது போனில் வீடியோ எடுத்துக்கொண்டார். பின்னர் அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு தனது பொது இடத்தில் தனது மகன் திருட்டுப்பழி சுமத்தப்பட்டு, தாக்கப்பட்ட வேதனையை வெளிப்படுத்தினார்.
ஆனால், இந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களில், மியாவின் காணாமல்போன ஐபோனை ஒரு UBER ஓட்டுநர் கொண்டுவந்து கொடுத்துள்ளார்.
ஆனால், என்ன நடந்துள்ளது என்று தெரியாமல், ஒருவர் மீது திருட்டுப் பட்டம் கட்டிய அப்பெண், கடைசியில் தங்களிடம் ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை என சிறுவனின் தந்தை வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் முடிந்து மீண்டும் தனது சொந்த ஊருக்கு திரும்பிவிட்டார் மியா. ஆனால், இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியது.
மேலும் தொலைக்காட்சிகளிலும் இந்த சம்பவம் செய்தியாக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு பிறகு, இப்போது மியா பொன்செட்டோ மீது NYPD பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மியா பொன்செட்டோ மீது கொள்ளை முயற்சி, Grand Larceny, ஒரு குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்பட்டது மற்றும் இரண்டு முறை தாக்க முயற்சித்ததற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மியா கைது செய்வதற்கு முன்னர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், இந்த சமபவத்துக்கு வருத்தம் தெரிவித்ததுடன் மன்னிப்பும் கேட்டுள்ளார்.