அமெரிக்கர்கள் இனி வீட்டிலேயே கொரோனா சோதனை செய்துகொள்ளலாம்! 232 மி. டொலர் செலவில் அரசு புதிய ஒப்பந்தம்
அமெரிக்காவில் இனி எவரும் தன்னிச்சையாக வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்துகொள்ள, இந்த ஆண்டிலிருந்து மக்களுக்கு ராபிட் சோதனை கிட் கிடைக்க அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது.
அமெரிக்க அரசு திங்கட்கிழமை Ellume, எனும் ஆஸ்திரிய நிறுவனத்துடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
அந்நிறுவனத்திடமிருந்து 8.5 மில்லியன் ராபிட் கொரோனா பரிசோதனை கிட்களை ஆர்டர் செய்துள்ளது. இதற்காக 231.8 மில்லியன் டொலர் செலவழிக்கவுள்ளது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலேயே இந்த நிறுவனம் ஒரு புதிய தொழிற்சாலையில் நிறுவி, விரைவில் சோதனை கிட்களை அரசிடம் ஒப்படைக்கவுள்ளது. தயாரிப்பு தொடங்கப்பட்டு ஒரே மாதத்தில் சுமார் 19 மில்லியன் கிட்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த கிட்களை இந்த ஆண்டுமுதலே, மக்களுக்கு எந்த மருத்துவ சீட்டும் இன்றி குறைந்த விலையில் கொடுக்கப்படவுள்ளது.
இதன்முலம் அறிகுறிகள் இருக்கும் மக்கள் தாங்களாகவே வீட்டில் சோதனை செய்துகொள்ளலாம் என்றும் ராபிட் சோதனை மூலம் தங்களுக்கான சோதனை முடிவை 15 நிமிடங்களில் உடனடியாக தெரிந்துகொள்ளலாம் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது சோதனை மையங்களில் கூட்டத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கிட்டின் விலை 30 டொலராக நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இது தற்போதைய சோதனை மையங்களில் செலவாகும் 100 முதல் 200 டொலர் என்பதைக் காட்டிலும் மிக குறைவு என்றாலும், இந்த விலை சாமானிய மக்களுக்கு அதிகம் என்று பலரும் விமர்சித்துவருகினற்னர்.
அதேபோல், பலரும் வீட்டிலேயே சோதனை செய்துகொண்டால், பாதிப்புகளின் எண்ணிக்கையை சரியாக அளவிட முடியாமல் போகலாம் என்றும் விமர்சிக்கப்படுகிறது.