ஒருபக்கம் நிலநடுக்கம் பேரிடர்... மறுபக்கம் கிராமங்கள் மீது குண்டு வீசும் மியான்மர் இராணுவம்
மியான்மரில் சுமார் 1,700 பேர் கொல்லப்பட்ட நிலநடுக்கத்தால் நாடு தத்தளித்து வரும் நிலையில், கிராமங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதற்காக, மியான்மரின் இராணுவ அரசாங்கத்திற்கு எதிரான ஆயுதமேந்திய எதிர்ப்பு இயக்கம் கடுமையாக விமர்சித்துள்ளது.
வான்வழித் தாக்குதல்
மியான்மரின் பழமையான இனப் படைகளில் ஒன்றான கரேன் தேசிய ஒன்றியம் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கையில், நிலநடுக்கத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், இராணுவ ஆட்சிக் குழு பொதுமக்கள் வாழும் பகுதிகளை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது என குறிப்பிட்டுள்ளது.
சாதாரண சூழ்நிலைகளில், இராணுவம் நிவாரண முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் என்றும், மாறாக அதன் மக்களைத் தாக்க படைகளை அனுப்புவதில் கவனம் செலுத்துவதாகவும் அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.
2021 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு மியான்மர் பல ஆயுதமேந்திய எதிர்க்கட்சி குழுக்களுடன் உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திடமிருந்து இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்திற்குப் பிறகு, கரேன் மாகாணத்தில் இராணுவ போர் விமானங்கள் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடங்கியது கொடூரத்தின் உச்சம் என்றே சமூக ஆர்வலர் குழு ஒன்று குறிப்பிட்டுள்ளது.
தேசிய ஒற்றுமை அரசாங்கம்
7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் மையப்பகுதி இராணுவப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியிலேயே இருந்தது. ஆனால் பேரழிவு பரவலாக ஏற்பட்டுள்ளது மற்றும் ஆயுதமேந்திய எதிர்ப்பு இயக்கங்களால் கைப்பற்றப்பட்ட சில பகுதிகளையும் நிலநடுக்கம் பாதித்தது.
இதனிடையே, 2021 இல் வெளியேற்றப்பட்ட அரசாங்கத்தின் எஞ்சியவர்களை உள்ளடக்கிய எதிர்க்கட்சியான தேசிய ஒற்றுமை அரசாங்கம் ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதன் கட்டளையின் கீழ் உள்ள இராணுவ ஆட்சிக்கு எதிரான போராளிகள் குழுக்கள் அனைத்தும் இராணுவ ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |