திருப்பரங்குன்றம் தீப சர்ச்சைக்கு மத்தியில் இந்து - இஸ்லாமியர் நெகிழ்ச்சி சம்பவம்
திருப்பரங்குன்றம் சர்ச்சைக்கு மத்தியில், இந்து - இஸ்லாமியர்களிடையே மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப சர்ச்சை
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், திருப்பரங்குன்ற மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதில் சர்ச்சை நிலவியது.

மலையில் தர்காவிற்கு அருகே உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென இந்து அமைப்பை சேர்ந்த ஒரு நபர் தாக்கல் செய்ய வழக்கில், தீப தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டுமென மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
ஆனால், தீர்ப்பை எதிர்த்து கோவில் நிர்வாகம் மேல்முறையீடு செய்த நிலையில், வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

இதனால், இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் அங்கு கூடி ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், பதற்றம் நிலவியது.
இந்து - இஸ்லாமியர் ஒற்றுமை
இந்த சூழலில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் திருப்பரங்குன்றத்தில் ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் வரும் ஜனவரி 6 ஆம் திகதி சந்தனக்கூடு விழா நடைபெற உள்ளது.

இதற்காக தர்காவில் நடைபெற்ற கொடியேற்ற திருவிழாவில், பாரம்பரியமாக இந்துக்கள் தவில் வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
பெரிய ரத வீதி பாதுஷா பள்ளிவாசலில் இருந்து மாட்டுவண்டியில் கொடி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த இந்துக்களும், திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்த இந்து பக்தர்களும் கொடியை வழிபட்டனர்.
இந்த கொடியை ஏந்தி செல்வதற்கான மாடுகளை இந்து குடும்பம் ஒன்று பல தலைமுறைகளாக அனுப்பி வருகிறது.

இதன் பின்னர், காவல்துறை பாதுகாப்புடன் சிறிய இஸ்லாமிய குழு ஒன்று மலை மீது உள்ள தர்காவிற்கு சென்று கொடியேற்றி வந்தது.
இது குறித்து பேசிய சிக்கந்தர் தர்கா செயலாளர் எம். ஆரிஃப் கான், "திருப்பரங்குரத்துடன் தொடர்பில்லாத குழுக்கள் பிளவை உருவாக்கி வகுப்புவாத மோதல்களைத் தூண்ட முயற்சிக்கின்றன. அது நடக்க நாங்கள் அனுமதிக்க முடியாது.
இங்கு இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். எங்கள் பண்டிகைகளையும் அவர்கள் கொண்டாடி வருகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |