வேலை வாய்ப்பு குவிந்துள்ளது... எண்ணிக்கையை வெளியிட்டு இளைஞர்களை ஊக்குவித்த பிரித்தானிய அமைச்சர்
பிரித்தானியாவில் வேலை வாய்ப்பு குவிந்துள்ளதாக குறிப்பிட்டு, வேலையில்லாதோர் தங்கள் முயற்சியை இன்னும் சிறிது அதிகரிக்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இளைஞர்கள் தீவிரம் காட்ட வேண்டும்
கடந்த சில ஆண்டுகள் கோவிட் மற்றும் உக்ரைன் போரினால் மறுக்க முடியாத அளவுக்கு கடினமாக இருந்துள்ளது என குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஜெர்மி ஹன்ட் மற்றும் வேலை மற்றும் ஓய்வூதிய செயலாளர் மெல் ஸ்ட்ரைட்,
தற்போது நாடு முழுவதும் 900,000 வேலை வாய்ப்புகள் நிரப்பப்படாமல் இருப்பதாகவும், இளைஞர்கள் தீவிரம் காட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, வேலை வாய்ப்பு தொடர்பில் அரசாங்கத்திடம் இருந்து உதவி பெறுவோர் குறித்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ள நிலையிலேயே அமைச்சர் தரப்பில் வேலை வாய்ப்பு எண்ணிக்கை வெளியானதாகவும் கூறப்படுகிறது.
கோவிட் பெருந்தொற்றுக்கு பின்னர் காலியிடங்கள் பெரும்பாலும் நிரப்பப்படாமலே உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலையில்லாதோருக்கான உதவிகள் என்பது தற்கால பாதுகாப்பு மட்டுமே என குறிப்பிட்டுள்ள அமைச்சர், அது நிரந்தரமல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
10 மாதங்களில் ஊதிய உயர்வு
சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் 900,000 வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதாகவும், வேலை வேண்டும் என்பவர்களுக்கு இது அரிய வாய்ப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த 10 மாதங்களில் ஊதிய உயர்வும் ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது 4 மில்லியன் மக்கள் அதிகமாக வேலையில் ஈடுபடுகின்றனர்.
மேலும், நீண்ட காலமாக நோயாளிகள் என குறிப்பிட்டு, வேலைக்கு செல்லாதோர் எண்ணிக்கை 2.8 மில்லியன் என்றும், மக்கள் பலர் தங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளால் போராடி வருவதாகவும், உளவியல் பாதிப்புகளால் வேலை இடத்தில் இருந்து வெளியேறும் சூழலும் உருவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |