ஆண்மையை நிரூபிக்க கார் ஓட்டவேண்டும்... பிரான்சில் நிலவும் ஒரு மாயை: விளைவு?
பிரான்சில், ஆண் என்றால் கார் ஓட்டவேண்டும், காரைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவர்தான் ஆண்மை கொண்டவர் என்பது போன்றதொரு கருத்து நிலவுகிறதாம்.
காரைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவர்தான் ஆண்மை கொண்டவர்
கார் என்பது ஆண்மையின் அடையாளம் என்னும் ஒரு கருத்து பரம்பரை பரம்பரையாக தந்தையிடமிருந்து மகனுக்கு தொடர்ந்துவருவதாகத் தான் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து தெரியவந்ததாகத் தெரிவிக்கிறார் Alain Mergier என்னும் சமூகவியலாளர்.
சிறுவயதிலிருந்தே, ஆண் என்றால் கார் ஓட்டவேண்டும், காரைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவர்தான் ஆண்மை கொண்டவர் என்பது போன்ற கருத்துக்கள் பையன்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறதாம்.
ஆக, இப்படிப்பட்ட எண்ணம், காரில் வேகமாக செல்வதின் மூலமும், வேகக்கட்டுப்பாடுகளை மீறுவதன் மூலமும்தான் ஆண் தன்னை நிரூபிக்க முடியும் என்ற தவறான கருத்தை உருவாக்கிவிடும் என்கிறார் Mergier. ஆகவேதான், யாராவது தன் காரை முந்திவிட்டால், அவரைத் தான் முந்தியே ஆகவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டுவிடுகிறது.
விளைவு?
இப்படிப்பட்ட தவறான கருத்துக்களின் விளைவு?
விபத்துக்கள், உயிரிழப்புக்கள்!
பிரான்சில், 2022இல் சாலை விபத்துக்களில் உயிரிழந்தவர்களில் 78 சதவிகிதத்தினர் ஆண்கள். பிரெஞ்சு சாரதிகளில் கடந்த ஆண்டு சாலை விபத்துக்களில் கொல்லப்பட்ட 18 முதல் 24 வயதுவரை உள்ளவர்களில் 88 சதவிகிதத்தினர் ஆண்கள். சாலை விபத்துக்களை ஏற்படுத்தியதாக கருதப்படுபவர்களில் 84 சதவிகிதம்பேரும் ஆண்கள். குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்துக்களில் சிக்கியவர்களில் 93 சதவிகிதத்தினரும் ஆண்கள்.
ஆக, ஆண்மை என்பதைக் கார் ஓட்டுவதில் காட்டவேண்டியதில்லை என்பதை வலியுறுத்தும் பிரச்சார வீடியோ ஒன்றை, பிரான்ஸ் சாலை பாதுகாப்பு அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
அதில் தன் மனைவி பிரசவிக்கும்போது அவருடன் உதவியாக இருக்கும் ஒரு ஆண், தனது குழந்தைக்கு உதவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. முடிவில், ஒரு ஆண் இப்படித்தான் இருக்கவேண்டுமென மற்றவர்கள் எதிர்பார்ப்பதை எல்லாம் நீ செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை, என தன் மகனிடம் கூறுகிறார் ஒரு தந்தை.
அந்தக் குழந்தை மட்டுமல்ல, பிரான்ஸ் நாட்டு ஆண்கள் அனைவருமே அவர் சொல்வதைக் கேட்டால் தங்கள் குடும்பத்துடன் நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழலாம்.