உக்ரைன் போருக்கு நடுவில் குறைப்பிரசவத்தில் பிறந்த இரட்டைக்குழந்தைகள்... தப்பியது எப்படி?: ஹாலிவுட் திரைப்படத்தை மிஞ்சும் ஒரு சம்பவம்
உக்ரைன் மீது புடின் போர் தொடுத்த சில மணி நேரங்களுக்குள் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார் உக்ரைன் பெண் ஒருவர்.
குறைப்பிரசவத்தில் அவசர அவசரமாக அறுவை சிகிச்சை மூலம் பிறந்த அந்தக் குழந்தைகள், உண்மையில் அமெரிக்கர் ஒருவரின் குழந்தைகள்.
அதாவது, Katerina என்ற அந்த உக்ரைன் பெண், அமெரிக்காவில் வாழும் Sasha Spektor (46) என்ற நபரின் குழந்தைகளை, தன் வயிற்றில் சுமக்கும் வாடகைத் தாயாக இருந்து அவர்களைப் பெற்றெடுத்துள்ளார்.
பிரசவத்தில் பிரச்சினைகள் இருப்பதால் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்ற தகவலைக் கேட்டு கவலையில் ஆழ்ந்திருந்த நிலையில்தான் Spektor தம்பதியரை இடிபோல் தாக்கியது, ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள செய்தி.
Kyiv நகரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் Katerina அந்த இரட்டைக் குழந்தைகளை பிரசவிக்க, பின்னர் நடுங்கும் குளிரினூடே விமானத் தாக்குதலுக்கு அஞ்சியபடி, தேவாலயம் ஒன்றின் அடித்தளத்தில் தஞ்சம் அடைந்துள்ளார் Katerina.
அதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் போருக்கு நடுவில் பணியாற்றிய அனுபவம் கொண்ட அமெரிக்க இராணுவ அதிகாரியான Lt. Commander Bryan Stern என்பவர், எப்படியாவது அந்தக் குழந்தைகளை அதன் பெற்றோரிடம் சேர்த்துவிடும் முயற்சியில் தனது குழுவினருடன் இறங்கியுள்ளார்.
அதன்படி, இன்குபேட்டர்களில் வைக்கப்பட்ட குழந்தைகளுடன் பல ஆம்புலன்ஸ்கள் சூழ புறப்பட்டிருக்கிறது Lt. Commander Sternஇன் குழு.
ஒருவேளை தங்கள் வாகனங்கள் தாக்குதலுக்குள்ளாகி மருத்துவர்கள் கொல்லப்பட்டுவிட்டால் என்ன செய்வது என்று யோசித்து, ஒவ்வொரு ஆம்புலன்சில் ஒரு மருத்துவராக, அதாவது ஏதாவது ஒரு ஆம்புலன்சில் இருக்கும் மருத்துவராவது உயிர்பிழைத்து குழந்தைகளைக் காப்பாற்றிவிடவேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுள்ளது அந்தக் குழு.
கடைசியாக, பல தடைகளைத் தாண்ட, பத்திரமாக குழந்தைகளுடன் போலந்து நாட்டை வந்தடைந்துள்ளது Lt. Commander Sternஇன் குழு.
அதற்குள் குழந்தைகளின் தந்தையான Spektor போலந்துக்கு வந்துவிட, அவரது மனைவியும் விரைவில் வந்து சேர இருக்கிறார்.
குழந்தைகள் சற்று தேறி, தாமாக பால் குடிக்கும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்தபின் அவர்களை அமெரிக்கா கொண்டு செல்ல இருக்கிறார்கள் அவர்களுடைய பெற்றோர்.
இன்னொரு விடயம் என்னவென்றால், அவர்கள் பிறந்த Kyiv நகரிலிருந்த அந்த மருத்துவமனை இப்போது இல்லை! அதை தகர்த்துவிட்டன ரஷ்யப் படைகள்...