அமெரிக்க ஜனாதிபதியின் மலேரியா கட்டுப்பாட்டு குழுவில்... இந்தியருக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கிய பொறுப்பு! குவியும் வாழ்த்துக்கள்
அமெரிக்க ஜனாதிபதி மலேரியா முன் முயற்சி குழுவின் உலகளாவிய ஒருங்கிணைப்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் ராஜ் பஞ்சாபியை ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்துள்ளார்.
ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் மலேரியாவை கட்டுப்படுத்தி அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்க ஜனாதிபதி மலேரியா முன்முயற்சி குழுவின் உலகளாவிய ஒருங்கிணைப்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் ராஜ் பஞ்சாபியை ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்துள்ளார்.
லைபீரியாவில் பிறந்த ராஜ் பஞ்சாபியும் அவரது குடும்பத்தினரும் உள்நாட்டுப்போரின் போது நாட்டை விட்டு வெளியேறி 1990-களில் அமெரிக்காவுக்கு அகதிகளாக வந்தனர்.
வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பில் இளங்கலை பட்டம் பெற்ற ராஜ் பஞ்சாபி, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் தொற்றுநோயியல் துறையில் பொது சுகாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
அதன்பிறகு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவ உதவி பேராசிரியராகவும், பிரிகாம் மற்றும் மகளிர் மருத்துவமனையின் இணை மருத்துவராகவும், லாஸ்ட் மைல் ஹெல்த்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இணை நிறுவனராகவும் பணியாற்றியுள்ளார்.
39 வயதான ராஜ் பஞ்சாபி தனது நியமனம் குறித்து டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், அமெரிக்க ஜனாதிபதியின் மலேரியா முன் முயற்சியை வழிநடத்த உலகளாவிய ஒருங்கிணைப்பாளராக ஜனாதிபதி ஜோ பைடனால் நியமிக்கப்பட்டதை பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். இந்த வாய்ப்பை பெற்றதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்