அம்பானி மகன் திருமணம் ஒன்றும் பொது நிகழ்ச்சி அல்ல.., சாலைகளை மூடுவதற்கு கடும் எதிர்ப்பில் மக்கள்
ஆனந்த் அம்பானியின் திருமணத்தையொட்டி ஜியோ வேல்டு சென்டருக்கு செல்லும் சாலைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனந்த் அம்பானி திருமணம்
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாள் நடைபெறவுள்ளது. இதற்கு உலகம் முழுவதும் இருந்து பிரபலங்கள் வரவுள்ளனர்.
இதனால், பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் இருக்கும் ஜியோ வேல்டு சென்டருக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் ஜூலை 12 -ம் திகதியில் இருந்து மூன்று நாட்கள் மூடப்படும் என்று போக்குவரத்து காவலர்கள் அறிவிப்பு வெளியிட்டனர்.
பொதுமக்கள் எதிர்ப்பு
இதற்கு, பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மகேஷ் என்ற ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில், "அம்பானி வீட்டு திருமணம் தனியார் திருமணம் தான், இது ஒன்றும் பொது நிகழ்ச்சி அல்ல. இதற்காக பொதுமக்களை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்.
சாலைகள் தனியார் சொத்து கிடையாது. அப்படியானால், இதற்கு ஏன் அதிகாரிகள் சாலையை மூட வேண்டும்? இதுபோல வசதி படைத்த யாராவது விவாகரத்து செய்தால் வீட்டில் இருக்க வேண்டும் என்று தடையுத்தரவு போடுவீர்களா?" என்று கூறியுள்ளார்.
அதேபோல மற்றொருவர், "இது அதிகாரத்தின் வெளிப்பாடு. அதிகாரத்திற்கு அரசு பணிந்து கொண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார். இதுபோல, பலரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |