எந்த நேரமும் வெடித்து பேரழிவை ஏற்படுத்தக் கூடியவர்கள் அவர்கள்: தமிழக அரசு தோல்வி- பாமக தலைவர் அன்புமணி
தமிழகத்தில் பெண்களுக்கு ஆபத்தான சூழல் நிலவுவதால் தமிழக அரசு தோல்வியடைந்துவிட்டது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா போதை பரவல் என பல குற்றங்கள் நடப்பதாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில், "திருப்பத்தூரைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர், கஞ்சா போதையில் இருந்த 4 மனித மிருகங்களால் கத்தி முனையில் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து நகை, பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், அதைத் தடுக்க தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காததும் கண்டிக்கத்தக்கவை. தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன" என கூறியுள்ளார்.
மேலும், "கஞ்சா போதையில் நடமாடும் மனிதர்கள் அனைவரும் மிருகங்கள்; அவர்கள் எந்த நேரமும் வெடித்து பேரழிவை ஏற்படுத்தக் காத்திருக்கும் வெடிகுண்டுக்கு ஒப்பானவர்கள் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்துகொண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்து பெண்களை பாதுகாப்பதில் தமிழக அரசு தோல்வியடைந்துவிட்டது" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |