அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாலுமி: மனைவிக்கு அனுப்பிய கடைசி குறுஞ்செய்தி
ஓமன் கடலில் அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்திய மாலுமி, உயிரிழப்பதற்கு முன்பு கடைசியாக குழந்தைகளை கவனித்துக் கொள் என மனைவிக்கு குறுஞ்செய்தி அனுப்பியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓமன் கடலில் அமெரிக்கா தாக்குதல்
ஓமன் கடலில் சரக்கு கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில், ஒரு மாலுமி ஆந்திராவை சேர்ந்த சுரேஷ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாய் மற்றும் தங்கையுடன் வசிக்கும் இவருக்கு பார்கவி என்ற மனைவியும், 13 மற்றும் 10 வயதில் இரண்டு மகன்களும் உள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளில் கப்பலில் பணிபுரியும் இவர், கப்பலின் தலைமை என்ஜினீயராக தற்போது பணியாற்றி வருகிறார்.
மனைவிக்கு அனுப்பிய கடைசி குறுஞ்செய்தி
ஆண்டின் பெரும்பாலான மாதப் பகுதியை கடலில் கழிக்கும் மாலுமி சுரேஷ், தினமும் நாளின் தொடக்கத்தில் தன்னுடைய மனைவிக்கு “குட் மார்னிங்” என்ற குறுஞ்செய்தியையும், இரவில் தூங்குவதற்கு முன்பு “குட் நைட் “என்ற குறுஞ்செய்தியும் அனுப்புவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதைப்போல் தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, தன்னுடைய மனைவிக்கு “குட் நைட்” குழந்தைகளை நன்றாக கவனித்துக் கொள் என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

பின்னர் கணவரின் வழக்கமான “குட் மார்னிங்” குறுஞ்செய்திக்காக காத்திருந்த மனைவி பார்கவிக்கு, சுரேஷின் இறப்பு செய்தி தான் கிடைத்துள்ளது.
வருகிற 24ம் திகதி சுரேஷ் - பார்கவி தம்பதிக்கு 15 ஆண்டு திருமண நாள் ஆகும். இதற்காக ஊருக்கு திரும்ப சுரேஷ் திட்டமிட்டு இருந்த நிலையில் இந்த சம்பவமானது அரங்கேறியுள்ளது.
மற்றொரு மாலுமியின் தற்காலிக மாற்றாக 10 நாட்கள் பணிக்கு மட்டுமே கப்பலுக்கு சென்ற மாலுமி சுரேஷ், சீனப் புத்தாண்டு விடுமுறை, சரக்கு இறக்கும் பணியில் தாமதம் ஆகிய காரணங்களால் அவரால் நாடு திரும்ப முடியவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |